பேரினவாதம் தாண்டவமாடும் இந்நாட்டில் தந்திரங்கள் தாராளமாகக் கையாளப்படுகின்றன: ஞா.ஸ்ரீநேசன்

276

 

பேரினவாதம் தாண்டவமாடும் இந்நாட்டில்,பிரித்தாளும் தந்திரங்கள் தாராளமாகக் கையாளப்படுகின்றன. குறிப்பாகச் சிறுபான்மை இனச் சமூகத்தினர் ஒற்றுமையாய்ச் செயற்பட்டு தமது உரிமைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக பல அடிப்படை வாதச்சூத்திரங்கள் கையாளப்படுகின்றன மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தமிழர்கள் என்ற வகையிலும், முஸ்லிம்கள் என்ற வகையிலும் ஐக்கியப்படுவதைத் தடுப்பதற்கும், தமிழ்ப்பேசும் மக்கள் என்ற வகையில் ஐக்கியப்படுவதற்கும் பல தடைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எடுத்தாளப்படுகின்றன.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தமக்குள் முரண்பட்டுக் கொள்வதற்கும்,மோதுவதற்குமான திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. அதிலும் தமிழர்களின் பலம் குறைக்கப்பட்டன.

அதனையடுத்துப் பலமாக உருவெடுத்து, பல பாரிய வெற்றிகளைப் பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினைப் பிளவுபடுத்துவதற்கான சதித்திட்டம் சமாதான ஒப்பந்தம் என்ற பொறியின் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.

பாரிய போராட்ட சக்தியாக இருந்த விடுதலைப்போராட்டம் பிரித்தாளும் தந்திரம் மூலமாக உடைக்கப்பட்டது. மௌனிக்கச் செய்யப்பட்டது, இதுவும் திட்டமிட்டு கனகச்சிதமாக மேற்கொள்ளப்பட்டது. இதிலும் தமிழர் பலம் குறைக்கப்பட்டது, பேரினவாதம் வெற்றிகண்டது.

ஆயுதப்போராட்டச் சக்தி மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் பலமான ஜனநாயக சக்தியாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காணப்பட்டது. அந்த சக்தியினை நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவீனப்படுத்துவதற்காக பல கெடுபிடிகளும், எடுபிடிகளும் செயற்பட்டு வருகின்றன.

கடந்தகால மகிந்தவின் ஆட்சியின் போது கெடுபிடிகள் ரீதியாகவும்,அவரின் எடுபிடிகள் ரீதியாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்கான முயற்சிகள் தோல்வியிலே முடிந்தன.

ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி, மலையகத் தமிழ்கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் போன்றவற்றை பலவீனப்படுத்துவதிலோ உடைப்பதிலோ வெற்றி கண்ட மகிந்தவால், தமிழ்தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதில் வெற்றி பெற முடியவில்லை.

மகிந்தவால் முடியாமல் போன காரியத்தினை தற்போது எப்படியோ செய்து விடவேண்டும் என்ற அடிப்படையில், மறைமுகமான சக்திகளும்¸ கடந்த காலத்தில் மகிந்தவின் அடிவருடியர்களாக இருந்த சிலரும் ஊடகர் என்ற பாணியில் செய்ய முற்படுவதைக் காணமுடிகின்றது.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பலமான விடயங்களை மறைத்தும், பலவீனர்களின் விடயத்தினை நிறைத்தும் காட்ட முற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை உடைக்கத் துடிக்கின்ற அகப்புற சக்திகளை உசுப்பி விடுகின்ற, உருக்கொடுத்து விடுகின்ற ஒப்பந்த வேலைகளை ஒரு சிலர் செய்து வருகின்றனர்.ஜெனிவா விடயத்தில் ஆளும் அரசாங்கத்திற்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்து கட்டுக்கோப்பான மேற்பார்வையின் கீழ், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் விதந்துரைக்கப்பட்ட,

இலங்கையரசினால் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே விடயஞானமுள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஒட்டு மொத்தமான கோரிக்கையாகும்.

இவற்றையெல்லாம் விட்டுத்தள்ளி விட்டு, சிலர் தமிழ்தேசியக் கூட்டமைப்பினை எப்படிச் சிதைக்கலாம் எனச்சதி தீட்டுகின்றனர்.

உண்மையில், ஜெனிவா விடயத்தில் மனித உரிமைப்பேரவையினால் சிபார்சு செய்யப்பட்ட விடயங்களை முழு அளவில் நிறைவேற்ற முடியாத இலங்கையரசு கால அவகாசம் கேட்கிறது.

மனித உரிமைப் பேரவையிலுள்ள ஏறத்தாழ சகல நாடுகளும் இலங்கையரசு அவற்றை எப்படியோ செய்ய வேண்டும் என்பதற்காகக் கண்டிப்புடன் கால அவகாசத்தினை வழங்க முன்வந்துள்ளன.

அதாவது அவகாசம் கேட்பதும், கொடுப்பதும் இலங்கையரசுடனும், மனித உரிமைப் பேரவை நாடுகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்களாகவே உள்ளன.

இந்த நிலையிற்றான் கண்டிப்பான நிபந்தனைகளுடன் இலங்கையரசு பொறுப்பேற்ற விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கட்சியின் நிலைப்பாடாகும்.

எனவே,இவ்விடயத்தில் விரும்பியோ, விரும்பாமலோ இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தேவை என்பதை மறைமுகமாக நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது.

விடயம் அப்படியிருக்கக் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று கையொப்பமிட்டவர்கள், கையொப்பமிடாதவர்கள் என்ற வகையில் குறித்த ஒரு ஊடகத்தினர் தமிழ்த்தேசியக் .கூட்டமைப்பினை உடைக்கலாம் என்று கனவு கண்டனர்.

ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எடுத்த முடிவினால் சகலரும் ஒரு நிலைக்கு வந்துள்ளனர். இதனால், பிளவுபடுத்தலாம் என்று நினைத்த சக்திகள் ஏமாற்றமடைந்துள்ளன. ஏமாறுகின்றவர்கள் உள்ளவரைதான் ஏமாறுகின்றவர்களால் வெற்றி கொள்ளமுடியும்.

ஏமாற்றுகின்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இல்லாததால் ஏமாற்ற நினைத்த சக்திகள் ஏமாற்றமடைந்துள்ளன. ஒன்று மட்டும் உண்மை.

பிளவுகள், பிரிவினைகள் வெற்றியளிக்காது அதிலும் குறிப்பாக பிளவுற்று வெளியேறுகின்றவர்களே தோல்வியடைவர்.

எனவே எம்மிடையேயுள்ள வலுவான ஒற்றுமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், மக்களுக்கும் வெற்றியைப் பெற்றுத் தரும். எனவே ஒற்றுமைக்கும் வெற்றிக்குமாக ஒன்றுபட்டுழைப்போம்.

எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்படுவோம். பேரினவாதிகளையும், அவர்களது எடுபிடிகளையும்¸ முகவர்களையும் இனங்கண்டு அவர்களது சதிவலையிற் சிக்காமல் வெற்றியடைவோம்.

மேலும், எமக்கு வேண்டியதெல்லாம் தனிப்பட்ட விளம்பரங்கள் அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்பேசும் மக்களுக்குமான வெற்றிகளேயாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE