
ஸ்டோன் வாஷ், பிரிண்டெட், ஜிக்ஜாக், டிசைனர், பார்மல், கேஷுவல், மேட்சிங், ஹாட், மினி போன்று பல ரகங்கள் வந்துவிட்டன. டி-ஷர்ட்டிற்கு பொருத்தமான கால் சட்டைகளை பெண்கள் அதிகம் தேர்வு செய்கிறார்கள் என்பதால், பிரபலமான ஜீன்ஸ் கம் பெனிகள் பல வண்ணங்களில் அழகிய கால் சட்டைகளை உருவாக்கி குவிக்கிறார்கள்.
இந்திய பெருநகர பெண்கள் அத்தகைய கால்சட்டைகளை விரும்பி அணிவதால் இப்போது வெளிநாட்டு நிறுவனங்களும் ஆன்லைனில் அமோகமாக விற்பனை செய்கின்றன. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ‘இமேஜ் கன்சல்ட்டன்ட்’ சவுமியா சதுர்வேதி, “பெரும்பாலும் கால் சட்டைகளை சவுகரியத்திற்காக அணிகிறார்கள். இமேஜ் என்று பார்த்தால் மற்ற இந்திய உடைகளைவிட கால்சட்டைகள் வித்தியாசமானவை. ஒரு சில உடைகளை இமேஜிற்காக உடுத்தாமல் சவுகரியத்திற்காக உடுத்த வேண்டியுள்ளது. அந்த இடத்தை கால்சட்டைகள் பிடித்துவிட்டன.
இதில் பார்மல் கால் சட்டைகளுக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது. இதை அலுவலகம் செல்லும் பெண்களும் அணிந்துகொள்ளலாம். கால்சட்டைகள் மேலே அணியும் டி-ஷர்ட் மற்றும் நீண்ட கேட்டுடனும் வடிவமைக்கப்படுகிறது. இதை அணிந்துகொண்டு எல்லா இடங்களுக்கும் செல்லலாம். பார்மலாகவும், ரிலாக்சாகவும் இருக்கும். படகு சவாரி போகும்போது உடை பறக்குமே என்றெல்லாம் கவலைப்படவேண்டியதில்லை. கால்சட்டைகள் நம்மை டென்ஷன் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்” என்கிறார்.
லண்டனின் வசிக்கும் கிளாரா, “இந்திய பெண்கள் இப்போது ரொம்பவும் மாறிவிட்டார்கள். வெளிநாட்டு பெண்களுக்காக வடிவமைக்கப்படும் கால் சட்டைகளை இன்று இந்தியப் பெண்களும் அணிகிறார்கள். வாகனம் ஓட்ட வசதியானது என்று டெல்லியில் உள்ள என் தோழிகள் சொல்கிறார்கள்” என்கிறார்.
கால் சட்டை குட்டையானது என்பதால் விலை குறைவதில்லை. சில வகை கால் சட்டைகளுக்கு முழுபேண்ட்டைவிட விலை அதிகம். துணியின் தரம், முறையான பிட்டிங்க், உயர்தர பட்டன்களை பொருத்துவதால் விலை அதிகமாகிவிடுகிறது. விளையாட்டு வீராங்கனைகளுக்கென தனியாக கால்சட்டைகள் தயாராகின்றன.
கால்சட்டைகளுக்கு மவுசு அதிகரிப்பதற்கு நடிகைகள் முக்கிய காரணம். தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் சினிமாக்களில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் கால்சட்டைகளோடு நடந்து அதற்கு புகழ் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து சராசரி பெண்களும் பெருநகரங்களில் கால்சட்டை அணிந்து காலாற நடக்கிறார்கள். தங்களுக்கு அவை மிகவும் ஏற்ற உடைகள் என்றும் சொல்கிறார்கள்.
கால்சட்டைகளை வடிவமைக்கும் நிறுவனங்கள் பெண்களின் நலனை கருத்தில்கொண்டு சூழலுக்கு ஏற்ற வகையில் அவைகளை உருவாக்கி வருகிறது. முன்பெல்லாம் சிறந்த கால் சட்டைகள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது. இப்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. பெண்கள் தேவையை உணர்ந்து கால் சட்டைகளை வாங்குகிறார்கள்.
இதில் இன்னொரு அனுகூலமும் இருக்கிறது. கால்சட்டை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள் உடல் எடையையும் கட்டுக்குள்வைத்துக் கொள்வார்கள். கால்களையும், அழகாக பராமரித்துக் கொள்வார்கள். அதனால் அவர்களது ஒட்டுமொத்த அழகும் எடுப்பாக தெரிகிறது. கால்சட்டை அணியும் பெண்கள் மற்றவர்களில் இருந்து வித்தியாசமானவர்களாகவும், கம்பீரமானவர்களாகவும் கருதிக்கொள்கிறார்கள். கால்சட்டை அணியும் பெண்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், செயல்திறன் மிக்கவர்களாகவும் தங்களை காட்டிக்கொள்ளவும் செய்கிறார்கள்.