பேஸ்புக் மூலம் இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

239
அழகிய பெண்களைப் போன்று பேஸ்புக்கில் தோன்றி இளைஞர்களிடம் பணம் பெற்றுக் கொள்ளும் கும்பல் பற்றிய விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

அழகிய பெண்களைப் போன்று தோன்றி இளைஞர்களை காதல் வலையில் சிக்கச் செய்து, அவர்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றுக்கொண்டு அவற்றை பிரசூரிக்கப் போவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது.

திட்டமிட்ட வகையில் இந்த கும்பல் இளைஞர்களை பேஸ்புக் மூலம் மிரட்டி பணம் பெற்றுக்கொண்டுள்ளது. பெண் ஒருவரைப் போன்று தோன்றி ஏமாற்றிய பேஸ்புக் குப்பலிடம் இராணுவச் சிப்பாய் ஒருவர் ஏமாந்து 210 000 ரூபா கப்பம் செலுத்தியுள்ளார். இவ்வாறு கப்பம் செலுத்திய இராணுவச் சிப்பாய் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த இராணுவச் சிப்பாயுடன் பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு மிக நெருக்கமான காதல் உறவு ஒன்றை ஏற்படுத்தி, சிப்பாயின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பிரசுரிக்கப்போவதாக அச்சுறுத்தி இராணுவச் சிப்பாயிடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் இந்த சம்பவத்துடன் தனிப்பட்ட ஒருவர் தொடர்புபடவில்லை எனவும், திட்டமிட்ட கும்பலொன்று செயற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE