பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும் அவர் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் விளக்கம் கோரவுள்ளார். விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்து முரண்பாடுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களால் பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும் அவரது அறிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா முதல்வரின் செயற்பாடுகள் குறித்து வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தான் வெளியிட்ட கருத்துக்களையும் சுட்டிக்காட்டினார். இக்கருத்துக்கள் தொடர்பில் ஆழமாகக் கவனம் செலுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “குறித்த விடயம் தொடர்பில் நானும் அவதானத்தை செலுத்தியுள்ளேன். வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் குறித்தும் அவருடைய அறிக்கை தொடர்பாக நான் அவரிடம் விளக்கம் கோரவுள்ளேன். அதேவேளை, எமது கட்சியுடனான முரண்பாடுகள் குறித்து நான் விரைவில் அவரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளேன். நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றதைத் தொடர்ந்து வடக்கு முதல்வர் எனக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அத்துடன் என்னைச் சந்திப்பதற்கும் தயராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அவரை சந்தித்து இவ்விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதோடு எதிர்காலத்தில் தொடர்ந்தும் செயற்படுவது குறித்து முக்கிய விடங்கள் தொடர்பாகவும் பேசவுள்ளேன்” என்றார். அதனையடுத்து வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் சில உறுப்பினர்கள் தமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக செயற்பட்டமை தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் செயலாளரின் செயற்பாடுகள், அதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவரான பொன்.செல்வராஜா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் கவனத்தில் எடுக்கப்பட்டது. அதேபோன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு , திருகோணமலை தேர்தல் மாவட்டங்களில் மேலுமொரு ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டபோதும் அது கைநழுவிப்போனதற்கான காரணங்கள்தொடர்பாகவும் கருத்துக்கள் கூறப்பட்டன. அதனையடுத்து பொதுத்தேர்தல் காலத்தில் கட்சியின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்வதற்காக தேர்தல் மீளாய்வுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அத்துடன் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம் தேசியப்பட்டியல் நியமனம் குறித்து அதிருப்தியை வெளியிட்டார். அதன்போது தேசியப்பட்டியலுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணத்தை கூட்டமைப்பின் தலைவர் தெளிவுபடுத்தினார். – See more at: http://www.malarum.com/article/tam/2015/09/11/11743/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-.html#sthash.rH5LoWlS.dpuf
Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com