கொடிய யுத்தத்தினால் உள்ளங்கள் உடைக்கப்பட்டுள்ளது. உள்ளங்கள் நொந்து போயுள்ளது. ஒவ்வொரு சமூகங்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்கின்ற நிலைமையே மன்னார் மாவட்டத்தில் உள்ளது. உள்ளங்கள் இணைக்கப்பட வேண்டும் மக்கள் மத்தியில் ஒற்றுமையினை ஏற்படுத்த அனைவரும் கை கோர்க்க வேண்டும் என மன்னார் மூர்வீதி யூம்மாப்பள்ளிவாசல் மௌலவி அசீம் தெரிவித்தார்.
வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
வடமாகாணத்தில் எமது மன்னார் மாவட்டம் முன்னிலையில் வருவதற்கு சொற்ப நேரம் கூட ஆகாது. இறைவன் நாடிவிட்டான். அந்த வகையில் நாங்கள் நம்பிக்கையுடன் முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவை இருந்து கொண்டிருக்கின்றது.
இஸ்ஸாத்தில் கடைசியாக வந்த இறை தூதர் சொன்னார்கள் ‘தாழ்ந்த கையை விட உயர்ந்த கை சிறந்தது’ என்று கூறினார்.
எனவே நாங்கள் எப்பொழுதும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து சிந்தித்துக் கொண்டிருப்பதை விட, எமது திறமைகளை உணர்ந்து நாங்கள் எங்களை முன்னோக்கி மற்ற மக்களுக்கும் கொடுக்கக்கூடிய நிலைக்கு வரக்கூடிய நிலைமையினை நாங்கள் உணர்ந்து எங்களுக்குள்லேயே நாங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
எங்களுடைய அரசியல்வாதிகள் குறிப்பாக அமைச்சர்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு தங்களுடைய சிந்தனைகளில் இப்படியான உதவிகளை செய்கின்ற போது ஆன்மீகவாதிகளாக இருக்கின்ற மதத்தலைவர்களாகிய நாங்களும் மனித உள்ளங்களில் நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் தோற்றுவிக்க முயற்சிக்கின்றோம்.
உள்ளங்கள் இணைக்கப்பட வேண்டும். கொடிய யுத்தத்தினால் உள்ளங்கள் உடைக்கப்பட்டுள்ளது. உள்ளங்கள் நொந்து போயுள்ளது.
சமூகங்கள் ஒன்றையொன்று சந்தேகக் கண்களுடன் பார்க்கின்ற நிலைமை இந்த மாவட்டத்திலேயே இருந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் பேசுகின்ற சமூகமாக இருக்கின்ற நாங்கள் மதத்தை வைத்து, இனத்தை வைத்து பிரித்து கிடக்கிறோம். எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை கூட இந்த பிரிவினை என்ற இனவாதம் மதவாதம் என்ற ஒன்றினை வைத்துக்கொண்டு தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு ஓர் சிறந்த உதாரணமாக வடமாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய பொருளாதார மத்திய நிலையம் ஒரு பேசும் பொருளாக இருப்பதனை நாங்கள் பார்க்கின்றோம்.
எங்களுக்குள் இருக்கின்ற அந்த பிரிவினைவாதத்தின் காரணமாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார மத்திய நிலையம் எமது கையை விட்டு போய் விடுமோ என்ற ஓர் அச்ச நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.
எங்களுடைய அரசியல் தலைவர்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஒற்றுமையினை கொண்டு வருகின்ற சக்தி இந்த கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் தாய் மார்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் இருக்கின்றது.
எனவே நீங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தி எங்களுக்குரிய உரிமையும், வளங்களையும் கொண்டு வாருங்கள்.
எனவே உங்களை தெரிவு செய்த எமது மாவட்டத்தை மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்ற இந்த உறுதிப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டும். எமது வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும்.
அதன்மூலம் உள்ளங்களில் நல்ல சிந்தனைகளை நாங்கள் ஏற்படுத்துவோம் என்றால் இறைவனுடைய உதவி நிச்சயமாக எங்களுக்கு கிடைக்கும்.
இறை உதவி எங்களுக்கு கிடைத்து விட்டது என்றால் எங்களுடைய முன்னேற்றத்தை எந்த சக்திகளினாலும் தடுத்து விட முடியாது என மேலும் தெரிவித்தார்.