இப்பொலிஸ் பிணையை வழங்க நுவரெலியா பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கந்தே வத்த, மேற்படி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 15.01.2016 அன்று மாலை பணித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழன் அன்று இரவு 9.30 மணியளவில் தலவாக்கலை மத்திய பஸ் தரிப்பு நிலையத்தின் ஓரத்தில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒருவரை, நகரில் இரவு நேர ரோந்து சேவையில் ஈடுப்பட்டிருந்த தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.வணிகதுங்க குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்துள்ளார்.
இவ் விசாரணையின் போது வாய்தர்க்கம் ஏற்பட பின் பொலிஸாரால் இந்நபர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதானவரை நேற்றுக் காலை பொலிஸ் நிலையத்தில் பார்வையிட சென்ற தாக்கப்பட்ட நபரின் உறவினர் ஒருவரையும் நிலைய பொறுப்பதிகாரி தாக்கியதுடன் பொலிஸ் காவலில் தடுத்து வைத்துள்ளார் என தாக்கத்துக்குள்ளான நபர்களின் வீட்டார்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் அறிந்த உறவினர்கள் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னால் தலைவர் அசோக சேபாலவின் உதவியினை கொண்டும் இன்னும் சிலருடனும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு பொலிஸ் மைதானத்தில் குழுமிய வண்ணம் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை வாய்க்கு வந்தபடியாக திட்டி தீர்த்துள்ளனர்.
இதனால் தலவாக்கலை நகரில் 15.01.2016 அன்று காலை முதல் பகல் 03.00 மணி வரை சாதாரண பதற்ற நிலை காணப்பட்டது.
மேலும் சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் இருவரும் தமக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறி, பொலிஸாரின் ஊடாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
எனினும் மாலை வேளை வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியேறி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தனர்.
இச்சம்பவம் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் முறுகல் நிலையை ஏற்படுத்தியதன் காரணமாக விடயம் அறிந்த நுவரெலியா பிராந்திய பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின் பொதுமக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதில் தாக்கப்பட்ட நபர்கள் இருவருக்கும் பொலிஸ் பிணை வழங்குவதாகவும் மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொது மக்களிடம் தெரிவித்துள்ளார்.