இந்தோனேசியாவில் இடம்பெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4×100 நீச்சல் போட்டிப் பிரிவில் இலங்கை அணியின் எதிர்பார்ப்பை வீரர்கள் போட்டி நிறைவடையும் முன்னரே தகர்த்துவிட்டனர்.காரணம் போட்டி விதிகளை மீறியதனால் இலங்கை அணியை போட்டி நடுவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றினர்.
இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டிகளின்போதும் இலங்கை அணி போட்டி விதிகளை மீறிய குற்றத்திற்காக வெளியேற்றப்பட்டிருந்தமையும் நினைவுகூரத்தக்கது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பாக மெத்தியூ அபேசிங்க, கைல் அபேசிங்க, செரந்த டி சில்வா மற்றும் அகலங்க பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த அணி நீச்சல் தடாகத்தில் 6 ஆவது வரிசையில் போட்டியிட்டது.
இதில் போட்டியை ஆரம்பித்த மெத்தியூ அபேசிங்க சிறந்த தொடக்கத்தைக் கொடுத்து இரண்டாமிடத்தைப் பெற்று தனது 100 மீற்றரை வெற்றிகரமாக நிறைவுசெய்தார்.
ஆனாலும் மெத்தியூ எல்லைக்கோட்டுக்கு வரமுன்னரே இரண்டாவது வீரரான கைல் அபேசிங்க தடாகத்திற்குள் குதித்ததே போட்டியிலிருந்து இலங்கை அணி வெளியேற காரணமாக அமைந்தது.
இலங்கை நீச்சல் பயிற்சியாளர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளாததே இந்த தவறுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.