
உடம்பினுள் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் ஆர்.ஜி.என்.கே. ரன்கோன்கே திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் லாஹுரை சேர்ந்த 37 வயதுடைய மொஹமத் அஸ்லம் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.
சந்தேக நபர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தடுப்புக் காவல் உத்தரவு பெற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரின் உடம்பினுள் மறைத்து வைத்திருந்த 367 கிராம் ஹெரோயின் அடங்கிய 37 உருண்டைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.