மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு 4 வருடங்கள் கழிந்த நிலையில் நேற்று புதன்கிழமை மன்னார் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவருக்கே நேற்று புதன்கிழமை மன்னார் மேல் நீதிமன்றம் 4 வருடங்கள் கடந்த நிலையில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
குறித்த குடும்பஸ்தர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி மன்னார் நடுக்குடா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின் குறித்த குடும்பஸ்தரின் வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து மன்னார் மேல் நீதிமன்ற்ததிற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் மன்னார் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக குறித்த குடும்பஸ்தர் மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கு சென்று வந்த நிலையில் நேற்று புதன் கிழமை வழமை போல் தனது வழக்கு விசாரணைகளுக்காக மன்னார் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
இதன் போது குறித்த குடும்ஸ்தரிடம் இருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பகுப்பாய்வு அறிக்கை மேல் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த பகுப்பாய்வு அறிக்கையில் 443.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மஹிந்த பினிதிய குறித்த குடும்பஸ்தருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.