மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 43 மில்லியனும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு சார் அபிவிருத்தித் திட்டங்களில் 3.84 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு சார் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பான அமைச்சு மற்றும் அரசாங்க அதிபரது அறிவுறுத்தல்களுக்கமைவாக இந்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ளூர் வீதிகள், கைத்தறி நிலையம் சார் வேலைத் திட்டங்களுக்கென 43 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வேலைத் திட்டங்களில் பெரும்பாலான வேலைத் திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளதுடன் நிறைவடையாத வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.