இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் சாட்டப்பட்டிருந்த படையதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, இலங்கை இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.
இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் குணரட்ன 53வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.
இந்தப் படைப்பிரிவினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இவரே பொறுப்பானவர் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்.
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, 2001ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், 523, 551 வது பிரிகேட்களினதும், வான்வழி தாக்குதல் படைப்பிரிவினதும் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர்.
பின்னர், 55வது, 53வது டிவிசன்களி்ன் கட்டளை அதிகாரியாக இருந்தார்.
35 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவுக்கு கஜபா படைப்பிரிவின் சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதையும், விருந்துபசாரமும், நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது.
இதனிடையே இவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை என்ற நூல் இன்று வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது..