போர் விமானங்கள் கொள்வனவு அனுமதி அளித்தது அமைச்சரவை

271
விமானப்படைக்காக பல்நோக்கு போர் விமானங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்  அமைச்சரவை இணை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக இந்த விடயத்தை தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ஓர் அரசிடமிருந்து பிறிதொரு அரசுக்கு பொருள் கொள்வனவு செய்யும் அடிப்படையின் கீழ், இந்த விமானக்கொள்வனவு இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
போர் விமானங்கள் வழங்கும் ஆர்வம் கொண்ட விமான உற்பத்தியாளர்கள், உதவி அடிப்படையில் இலங்கை விமானப்படைக்காக பல்நோக்கு போர் விமானங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, விமானக்கொள்வனவு செய்யப்பபடுவதற்கான அவசியம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரவை இணை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.
ராஜித சேனாரத்ன “கிபீர் விமானங்கள் ஏழு காணப்படுகின்ற போதிலும் ஒன்று மாத்திரமே பாவனைக்கு உகந்த வகையில் காணப்படுகின்றது. மிக் 23, 27 ரக விமானங்கள் ஏழு காணப்படுகின்ற போதிலும் பாவனைக்கு உகந்த வகையில் எதுவும் இல்லை.
F7BS மற்றும் FT7BS ரக விமானங்கள் நான்கு காணப்பட்டாலும் பாவனைக்கு எதுவும் இல்லை. F7GS ரக விமானங்கள் நான்கு காணப்படுகின்ற போதிலும் இரண்டு மாத்திரமே பாவனையில் உள்ளன. எட்டு விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விமானப்படைக்கு கொள்வனவு செய்யப்படும் அனைத்து விமானங்களும் தாக்குதல் விமானங்களே. சரக்கு விமானங்கள் என்று எதுவும் இல்லை. எங்களது வெளிப்பாட்டினை தெரிவித்துள்ளோம். ஆகவே சலுகைகளுக்கு அமைய கொள்வனவு செய்வோம் என்றார்.
SHARE