போலி வெளிநாட்டு விஸ்கி ரக மதுபானம் தயாரித்த பொறியிலாளர் கைது!

237

Arrest2-1313

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு விஸ்கி ரக மதுபானம் உற்பத்தி செய்த சிவில் பொறியியலாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதிஉயர் ரக வெளிநாட்டு விஸ்கி ரகம் என்ற போர்வையில் போலியாக தயாரிக்கப்பட்ட இந்த கலப்பட கள்ளச் சாரயம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கந்தானை பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் இந்தபோலி கள்ளச் சாராய உற்பத்திசாலை நடத்தப்பட்டுள்ளது.

போலியாக உற்பத்தி செய்யப்பட்ட மதுபானம் அடங்கிய 200 போத்தல் மதுபானம் மற்றும் போத்தல்களில் அடைக்கப்படாத 2000 லீற்றர் போலி மதுபானம் ஆகியனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கத்தானை கலஎலிய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சொகுசு வீடு இத்தாலியில் வசிக்கும் ஒருவரது எனவும் மாத வாடகையாக 50000 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீட்டின் கீழ் பகுதியில் பொறியியலாளர் குடும்பத்துடன் தங்கியிருந்ததாகவும் மேல் மாடியில் மதுபான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீர்வையற்ற கடைகளில் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவித்து இந்த வகை விஸ்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மார்ஷல் கிங் ரொபர்ட் மற்றும் ஒக்டேவ் ரக விஸ்கி போத்தல்கள் என விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மரக்கறி லொறிகளில் இடைத்தரகர்கள் ஊடாக கொழும்பு மட்டுமன்றி வடக்கு கிழக்கிலும் இந்த வகை போலி விஸ்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பொறியில்துறையில் கற்ற பாடங்களை மிகவும் நுட்பமான முறையில் பயன்படுத்தி எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் மிகவும் நூதன முறையில் இந்த விஸ்கி உற்பத்திசாலை நடத்தப்பட்டுள்ளது.

2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் இந்த ரக விஸ்கி போத்தல்களை இவர் இடைத்தரகர்களுக்கு ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் ஒரு போத்தல் விஸ்கி விற்பனையில் இவருக்கு 600 ரூபா வருமானம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி கூரியர் சேவைகளில் ஒன்றான டி.எச்.எல் கூரியர் சேவை ஊடாக அமெரிக்காவிலிருந்து போத்தலுக்கான மூடிகள் லேபல்கள் விஸ்கி சுவையூட்டி என்பன தருவிக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபரை கைது செய்ததன் பின்னர் இவரது இடைத்தரகர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து வெட்69 மற்றும் கிரான்ட் ரக 40 போலி விஸ்கி போத்தல்களையும் மீட்டுள்ளனர்.

தீர்வையற்ற கடைகளில் கொள்வனவு செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் என்ற போர்வையில் போலி மதுபான விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

SHARE