மகிந்தவோ, கூட்டு எதிர்க்கட்சியினரோ அபயராம விகாரையில் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை!

293
நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராம விகாரையில், அரசியல் கூட்டங்களையோ அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்கு, தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை விதித்துள்ளது.

இது குறித்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.டி.குணசேகர, நேற்று திங்கட்கிழமை விதித்தார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராம விஹாரையில், அரசியல் கூட்டங்களையோ அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்கான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, கிருலப்பனையில் அமைந்துள்ள பூர்வாயமாயா பௌத்த விகாரையின் தலைமை பிக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தமையை அடுத்தே இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான மையமாக, அபயராம விகாரை விளங்குவதாகவும் இது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியினரின் ஊடகவியலாளர் மாநாடுகள் அனைத்தும் அங்கேயே நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது தலைமை பதவி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தான் குறித்த பதவிக்கு அதிகாரபூர்வமாகவே நியமிக்கப்பட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விகாரை, அரசியல் கூட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதால், பௌத்தர்கள் மத்தியிலும் ஏனைய பிக்குமார் மத்தியிலும் மதிப்பிழந்து உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்புடைய அடுத்த கட்ட விசாரணை பெப்ரவரி மாதம் 15ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

SHARE