கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இனவாத அமைப்பொன்றின் செயற்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இரகசிய கணக்கிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது நாட்டில் கிளப்பட்டு வரும் இனவாத ஆபத்தான கருத்துகள் மற்றும் இனவாத தூண்டல் நடவடிக்கைகள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும், அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வைத்து இது தொடர்பில் பாதுகாப்புக்குப் பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த கணக்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கோ அல்லது கணக்கு தொடர்பான தகவல்களை தேடிப் பார்ப்பதற்கோ தடையொன்று காணப்படுவதாகவும் குறித்த அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த அடிப்படைவாத சக்தியினால் கடந்த 2014 ஆம் ஆண்டு பேருவளை பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டு, சொத்து அழிவுகளும் ஏற்படுத்தப்பட்டன.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட இரகசியப் பொலிஸார், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குறித்த அதிகாரி தகவல்களை அறிவித்துள்ளார்.
இந்த அடிப்படைவாத அமைப்பின் பின்புலத்தில் காணப்படும் நிறுவனமயப்படுத்தப்பட்ட குழு தொடர்பில் தற்பொழுது இரகசிய பொலிஸார் தகவல்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, தற்பொழுது நாட்டில் செயற்பட்டு வரும் முக்கிய இனவாதக் குழுவினால் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட வாகன ஊர்வலத்தின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சியின் பெல்மடுல்ல வீட்டில் வைத்து தேனீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டதாகவும் முக்கிய அரசியல் வட்டாரங்கள் அறிவித்துள்ளன