இலங்கை அரசு ஒப்புக்கொண்ட தீர்மானத்தினை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நியாயப்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைகள்
மேற்கொள்ளப்படுமென்ற கருத்தினை ஜனாதிபதி மற்றும் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் அடியோடு மறுதலித்துள்ளார்கள்.
சர்வதேசம் வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணையினை வலியுறுத்தி வருகின்ற சூழ்நிலையில் இலங்கையில் நடைபெறும் கள நிலவரங்களை பார்க்கும் போது உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை.
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை குமாரபுரத்தில் 26ற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சுடப்பட்டும், வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
கொலை செய்தவர்களை இனங்காட்டி சாட்சியமளித்ததன் பின்னரும், யூரி சபையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 6 இராணுவத்தினரையும் விடுதலை செய்வதாக மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
மேல் முறையீடு செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில், மேல் முறையீடு செய்து நியாயம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் காணப்படுகின்றது.
இவ்வாறு 26 பேர் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான வழக்கில் அக்கறை காட்டவில்லை. யூரர்கள் இல்லாமல் திறந்த நீதிமன்றில் ஏன் விசாரணைகளை நடாத்தி தீர்ப்பு வழங்கியருக்க கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, பட்டினிக்கான அமைப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் 5 மாணவர்கள் படுகொலைக்கான நீதிகள் இதுவரை கிடைக்கவில்லை.
உள்நாட்டு விசாரணையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என தெளிவாக தெரிந்ததன் பின்னரும், உள்நாட்டு விசாரணையாளர்களை வைத்துக்கொண்டு சர்வதேச விசாரணைகளை நடாத்துவோம் என்று கூறுவது ஏமாற்று நாடகம்.
அண்மையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்கு போர்க்குற்றத்திற்கு இராணுவத்தினரை நிறுத்தக்கூடாது என கூறியும், வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்ககூடாது என்று கூறி பாதயாத்திரை மேற்கொண்டார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒற்றையாட்சிக்குள் தான் என முன்னாள் ஜனாதிபதி கோரமுகத்துடன் சொல்வதை மென்மையாக சிரித்த முகத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பார்த்துக்கொண்டிருப்பது, தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தினைக்கொடுக்கின்றது.
இலங்கை அரசு ஒப்புக்கொண்ட தீர்மானத்தினை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அரசியல் தீர்வும் இழுபறியாக இருந்து வரும் நிலையில், தேசிய நல்லிணக்கத்தினைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
போர்க்குற்றத்திற்கோ, இனப்பிரச்சினைக்கோ அரசியல் தீர்வு கிடைக்காத வரையில் தேசிய நல்லிணக்கத்திற்கு இடமில்லை.
அடிமட்டத்தில் உள்ள மக்கள் சர்வதேச விசாரணையினையே வலியுறுத்தி வருகின்றார்கள். இதனை சர்வதேசம் புரிந்துகொண்டு, இதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க சர்வதேசம் முன்வர வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இந்த விடயங்கள் அனைத்தையும் இலங்கையில் உள்ள தமிழ் தலைமைகள் என்று சொல்பவர்கள் தற்போது மௌனமாக இருந்துவிட்டு பின்னர் பேசுவதில் பிரியோசனம் இல்லை.
உள்நாட்டில் ஒரு தீர்வு சாத்தியமில்லை என்றும் சர்வதேசத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.