மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.இதுபோலத்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போருக்கு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியது விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் தான் என்றும், அவர்கள் உயிரோடு இல்லாத நிலையில் ஒரு தரப்பினருக்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்வதில் என்ன நியாயம்? என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இவ்வாறாக அரசாங்கத் தரப்பில் உள்ளவர்கள் ஒருபக்கத்தில் ஐநா விசாரணைக்குழுவின் பரிந்துரைகளையும் ஐநா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்வதாக கூறினாலும் இன்னொரு புறத்தில் அதற்கு முரணான கருத்துகளையே வெளியிட்டு வருகின்றனர்.அதாவது நம்பகமான விசாரணைகள் நடத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் சர்வதேச அரங்கில் வாக்குறுதி கொடுக்கின்ற அரசாங்கம் தான் படையினரைக் காப்பாற்றவே விசாரணை நடத்தப் போகிறோம் என்று கூறி வருகிறது.இவ்வாறானதொரு நிலையில் நடக்கப் போகும் விசாரணைகள் விடயத்தில் தமிழ் மக்கள் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில் அரசபடைகளும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் இழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் கண்டறியப்பட்டுள்ள விடயங்களை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் போது போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று நிரூபிக்கக் கூடியதாக இருக்கும் என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் கூறியிருக்கிறார்.அரச படையினர் மருத்துவமனைகள் மீதும், பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தியதைக் கண்டறிந்துள்ளதாகவும், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பெண்களுக்கெதிரான வல்லுறவுகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதை விசாரணைகளில் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இராணுவத்தின் மீது ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெளிவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற நிலையிலும் கூட படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையை நடத்தக் கோருகிறோம். படையினரைத் தண்டிக்க அனுமதியோம். ஒரு தரப்புக்கு மட்டும் தண்டனை கொடுக்கப்படுவது அநீதி என்றெல்லாம் அரசதரப்பு கூறுவது முரண்பாடாக உள்ளது.கடந்த மாத நடுப்பகுதியில் ஐநா விசாரணை அறிக்கை வெளியான போது மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு தண்டனை விலக்குரிமை பெற்றுக்கொடுக்கும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவருவேன் என்று கூறினார்.
இலங்கையில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட படையினர் மற்றும் பொலிஸாரைப் பாதுகாக்க இத்தகைய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட வரலாறு உள்ளது.அதையே தாம் மீண்டும் கொண்டுவரப் போவதாக கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.அவ்வாறானதொரு சட்டத்தை கொண்டுவந்தால் சர்வதேச அரங்கில் ஏற்கனவே தண்டனையில் இருந்து தப்பிக்கும் போக்கு குறித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இலங்கை மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகும்.
அதைச் சுட்டிக்காட்டாத பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிலர் பொதுமன்னிப்புத் தீர்மானத்தை பாராளுமன்றில் கொண்டுவரப் போவதாக கூறுகின்றனர்.நாங்களோ போர்க்குற்றம் நடந்தது என்று ஏற்கவேயில்லை, ஆனால் இவர்கள் போர்க்குற்றங்கள் நடந்தது. தாமே குற்றவாளிகள் என்று முட்டாள்தனமாக ஒப்புக்கொள்ள முனைகின்றனர் என்று விசனத்துடன் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனோபாவம் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை மட்டுமன்றி, முன்னைய அரசாங்கத்தையும் கூட பாதுகாக்க அரசாங்கம் முற்படுகிறது என்பதைத் தான் காட்டுகிறது.
இந்த விடயத்தில் அரசாங்கத்தில் உள்ளவர்களை விட அரசாங்கத்துக்கு வெளியில் உள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்ற ஒரு சிலர் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.போர் நடந்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.தாமே இராணுவத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததாகவும் போர்க்குற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.ஆனாலும் இராணுவத்தில் உள்ள சிலர் தவறான வழிநடத்தல்களினால் குற்றங்களை இழைத்திருக்கலாம் என்றும் அவ்வாறானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அதைவிட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எத்தகைய விசாரணைகள் எங்கு நடத்தப்பட்டாலும் அதற்கு ஒத்துழைக்கத் தயார் என்றும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை அனுபவிக்கவும் தயார் என்றும் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஆனால் இத்தகைய தெளிவுடன் அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் கருத்து வெளியிடுவதை காண முடியவில்லை.அவர்கள் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர்.இப்போதைய நிலையில் போர்க்குற்ற விசாரணை என்பது படையினரையோ முன்னைய ஆட்சியாளரையோ முன்வைத்து இடம்பெறவில்லை என்பதையும் அவர்களைத் தண்டிக்க இடமளியோம் என்பதையும் வெளிப்படுத்துவதில் தான் அரசாங்கம் கூடிய அக்கறை காட்டுகிறது.ஏனென்றால் சிங்கள மக்களும், படையினரும், இந்த விசாரணைகளுக்கு எதிராக வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டால் இப்போதைய அரசாங்கத்தினால் தாக்குப் பிடிக்க முடியாது.
எனவே தான் சிங்கள மக்களையும் படையினரையும் சமாளிக்கப் பார்க்கிறது.வெளிநாட்டுத் தலையீட்டுடன் கூடிய விசாரணைக்கு இணங்கினாலும் அவ்வாறு நடக்காது என்று நம்ப வைக்க முயற்சிக்கிறது.படையினரைத் தண்டிக்க விடமாட்டோம் என்றும் கூறுகிறது.ஆனால் நம்பகமான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் நிச்சயமாக படையினரைப் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்க முடியாது.ஏனென்றால் ஏராளமான குற்றங்களுக்கு சாட்சிகளும் இருக்கின்றனர், சான்றுகளும் இருக்கின்றன.
அவற்றை வைத்து குற்றங்களை நிரூபிக்க போதிய வாய்ப்புகளும் உள்ளன.ஐநா மனித உரிமை ஆணையாளரின் உரையிலும் அவரது விசாரணைக்குழுவின் அறிக்கையிலும் இதுபற்றித் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.அதேவேளை விசாரணைகளின் பின்னர் குற்றம் காணப்படுவோர் மீதும் இந்த அரசாங்கம் இதே கருணையை வெளிப்படுத்துமேயானால் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லியக்கச் செயற்பாடுகள் முழுமையேடையாது போகும்.ஏனென்றால் பொறுப்புக்கூறல், நல்லிணக்கச் செயற்பாடுகளில் தனியே சிங்கள மக்களுக்கும், படை்யினருக்கும் நம்பிக்கையூட்ட வேண்டிய பொறுப்பு மட்டும் இந்த அரசாங்கத்துக்கு இருக்கவில்லை.
இவர்களுக்கும் அப்பால், இந்தப் போரினால் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட தமிழ் மக்களினதும் நம்பிக்கையையும் பெற வேண்டும்.அரசாஙகத் தரப்பில் உள்ளவர்கள் வெளியிடுகின்ற கருத்துகள் சிங்கள மக்களை திருப்திப்படுத்துகிறதோ இல்லையோ தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.இத்தகைய போக்கு தொடர்ந்து சென்றால் அது எதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படக் கூடிய எந்தவொரு பொறுப்புக்கூறல், நல்லிணக்கச் செயன்முறைகளாலும் முன்னேற்றத்தை எட்ட முடியாது போகும்.