வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தனது மகிழ்ச்சியை அருகில் இருந்த வீரர்களுடன் பகிர்ந்து கொண்டது தொடர்பான புகைப்படங்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
வடகொரியா தொடர்ந்து அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும், வடகொரியா தன்னுடைய சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. அது தோல்வியில் முடிந்தது.
இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் பொம்மை உபகரணங்களை வைத்து வடகொரியா போக்கு காட்டி வருவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை வடகொரியா மீண்டும் தன்னுடைய ஏவுகணை சோதனையை மேற்கொண்டது.
இச்சோதனை வட மேற்கு பியாங்யாங்கில் உள்ள குசாங் பகுதியில் இருந்து நடத்தப்பட்டது. அங்கிருந்து ஏவப்பட்ட ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்தது. இதை தென்கொரியா மற்றும் அமெரிக்கா உறுதி செய்தது.
இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்க கூடியது அல்ல என அமெரிக்க பசிபிக் கமாண்ட் தெரிவித்துள்ளது. வடகொரியா இது போன்ற 2 ஏவுகணைகளை தயாரித்துள்ளது. அது அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்த ஏவுகணை சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஏவுகணை வெற்றிகரமாக பறந்ததால், வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் தன்னுடைய மகிழ்ச்சியை அருகில் இருந்த இராணுவவீரர்களுடன் வெளிப்படுத்தியது தொடர்பான புகைப்படங்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
வடகொரியாவின் இந்த செயலால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க உலகநாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.