மகேஸ்வரன் அவர்கள் முன்னிறுத்திய தமிழ்த்தேசியவாதத்தை விடவுமா, இங்கு வேறுயாரும் தமிழ்த்தேசியம் பேசிவிட்டார்கள்?

336

 

தேசிய அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே, தான் அங்கத்துவம் வகிக்கும் அந்த அரசுக்கு நித்தமும் பெரும் குடைச்சலை கொடுத்து நிம்மதியை கெடுத்துக்கொண்டிருந்த தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள், சமகால அரசியல் சூழலில் இன்று எங்கள் கூடவே இருந்திருக்க வேண்டும். சிறீலங்காவின் செங்கோல் காலி முகத்துவாரத்திலோ அல்லது ஹம்பாந்தோட்டை கடலிலோ தூக்கி வீசியெறியப்பட்டிருக்கும் என்றும், தேசிய அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு ‘தமிழ்த்தேசியம், தனித்தமிழ் தாயகம், சுயாட்சியை’ வலியுறுத்துவது – கோருவது மிகவும் கடினமானது. சவாலானது!
unnamed (8)
இந்தக்கடினமான, சவாலான தேசியப்பணியைத்தான் மகேஸ்வரன் அவர்கள் செய்திருந்தார். மீதமுள்ள அவரது பணியைத்தான் நாங்கள் தொடர்ந்தும் முன்கொண்டுசெல்ல விரும்புகின்றோம் என்றும், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச்சின்னத்தில் இலக்கம் 6 இல் போட்டியிடும் வைத்தியகலாநிதி சிவசங்கர் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 
தமிழ் மக்கள், சிவப்பா மஞ்சளா பச்சையா நீலமா என்று கட்சிகளை முன்னிறுத்தி வாக்களிக்கக்கூடாது. அவ்வாறானதொரு வாக்களிப்பு மிகவும் ஆபத்தானது. அது வாக்காளர்களின் சமுக பொருளாதார கட்டமைப்புகளில் செல்வாக்கு செலுத்தாது. துன்பத்தையே தரும்.
மாறாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குண இயல்புகளை, அவர்கள் சம்பாதித்து வைத்துள்ள சமுக நம்பகத்தன்மையை, பொறுப்பான நடத்தையை, சமுக அந்தஸ்தை முன்னிறுத்தியே வாக்களிக்க வேண்டும்.இத்தகைய விழிப்புணர்வுள்ள யாழ். மாவட்ட மக்களின் வாக்களிப்பே கடந்த காலத்தில் மகேஸ்வரன் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது. மகேஸ்வரன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்கானது, ‘கட்சிகளுக்கல்ல அவரவர் கண்ணியத்துக்கே மக்களின் வாக்கு’ எனும் உண்மையை வெளிப்படுத்தியிருந்தது.
சமகால அரசியல் சூழமைவுகளில் ‘தொட்டில் முதல் சவப்பெட்டி வரை’ இங்கு எல்லாவற்றையும் அரசியலே தீர்மானிக்கின்றது. எல்லாவற்றிலும் அரசியலும் அதன் கொள்கைகளுமே தாக்கம் செலுத்துகின்றன. நிலைமை இவ்வாறு இருக்கும்போது நாட்டின் பலம் பொருந்திய தேசியக்கட்சிகளில் போட்டியிடுபவர்களுக்கு ‘மக்கள் பற்றிய புரிதலும் மண் பற்றிய தெளிதலும்’ இல்லை என்ற வாதம் முற்றிலும் தவறானது என்பதை, மகேஸ்வரன் அவர்கள் தனது உயிர் அர்ப்பணத்தின் மூலமாக நிரூபித்துக்காட்டியிருந்தார்.
மகேஸ்வரன் அவர்கள் பேசிய தமிழ்த்தேசியவாதத்தை விடவுமா, இங்கு வேறுயாரும் தமிழ்த்தேசியம் பேசிவிட்டார்கள்? அவ்வாறாயின் தமிழ் தேசியத்துக்காகவே வாழ்ந்து, பேசி, செயலாற்றி, தமிழ்த்தேசியத்துக்காகவே உயிர் அர்ப்பணமாகிப்போன மகேஸ்வரன் அவர்களின் தியாகத்தை நீங்கள் மறுதளிக்கின்றீர்களா? தேசிய அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே, தான் அங்கத்துவம் வகிக்கும் அந்த அரசுக்கு நித்தமும் பெரும் குடைச்சலை கொடுத்து நிம்மதியை கெடுத்துக்கொண்டிருந்தவர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள்.
எமது விடுதலை இயக்கமாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் படையப்புலனாய்வு போராளிகளும், மறைமுக – உயிர்க்கொடை தாக்குதல் அணிகளும் தலைநகரில் தமது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் செறிவுப்படுத்தியிருந்த மிகவும் நெருக்கடியான, இறுக்கமான, பதட்டமான 2007-2008, அந்தக்காலப்பகுதியில் கொழும்பின் மையப்பகுதிகள் மற்றும் கொழும்பின் புறநகர்ப்பகுதிகளில் வாழ்ந்து வந்த பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை, கோத்தபாய ராஜபக்ஸவின் உத்தரவின் பிரகாரம் இரவோடு இரவாக பேருந்துகளில் ஏற்றி  வவுனியாவில் கொண்டுவந்து இறக்கிவிட முயன்றபோது,
‘அப்படியென்றால் தமிழ் மக்களுக்கென்று ஒரு நாடு உள்ளது. அது வடக்கு கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் என்பதை இந்த அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது!’ என்று பாராளுமன்றத்தில் கர்ஜித்து, அரசை நிலைகுலையச்செய்து அன்று எமது மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பலவந்தமான குடிபெயர்ப்பை தடுத்து நிறுத்தியிருந்தார்.
‘சிறீலங்கா நாடு மெய்யான ஜனநாயக நாடு கிடையாது. இங்கு வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்கள், உணவு உற்பத்திப்பொருள்கள், மருந்துப்பொருள்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஒருவகையான தமிழினப்படுகொலை – இனஒதுக்கல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆள்கடத்தல், சித்திரவதைகள், படுகொலைகள் உள்ளிட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ்க்குடியியல் சமுகம் உயிர் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற – உத்தரவாதமற்ற நாடு’ என்பதை, பாராளுமன்றத்துக்குள்ளே இரண்டு தடவைகள் செங்கோலை தூக்கி எறிய முயன்று சர்வதேச சமுகத்துக்கு சிறீலங்காவின் நல்லாட்சி தொடர்பில் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருந்தார்.
வடக்கு கிழக்கில் இன்றுள்ள தமிழ்த்தேசியம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் பலரும், அன்றும் இதே மகேஸ்வரன் அவர்களின் காலத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு அன்று இந்த துணிச்சல் இருந்ததா? இல்லை இனியாவது வரத்தான் போகின்றதா? மகேஸ்வரன் அவர்கள் சாதிக்காததையா இவர்கள் சாதித்து விட்டார்கள்? தேசிய அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு ‘தமிழ்த்தேசியம், தனித்தமிழ் தாயகம், சுயாட்சியை’ வலியுறுத்துவது – கோருவது மிகவும் கடினமானது. சவாலானது. இந்த கடினமான, சவாலான தேசியப்பணியைத்தான் மகேஸ்வரன் அவர்கள் செப்பனே செய்திருந்தார். 
மகேஸ்வரன் அவர்களின் அதிதீவிர தமிழ்த்தேசியவாத போக்கால் ஒருகட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு, மகேஸ்வரனுக்கு ஏன், எதற்கு தமது கட்சியில் ஆசன ஒதுக்கீடு வழங்கினோம்? என்று தலையைப்போட்டு பிய்த்துக்கொள்ளுமளவுக்கு சங்கட நிலைமையை தோற்றுவித்திருந்தது என்பதை யாவரும் நன்கு அறிவர்.
ஏனெனில் ஐக்கிய தேசியக்கட்சி ஆளும் கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, அல்லது கூட்டுச்சேர்ந்தபோதும் சரி, இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைகளினதும் சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் குறிப்பாக தமிழ்மொழி பேசும் மக்களை வஞ்சிக்கும், அவர்களை தண்டிக்கும் ‘பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால தடைச்சட்டம்’ உள்ளிட்ட மோசமான சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோதெல்லாம், அவை புதுப்பிக்கப்பட்டபோதெல்லாம் அதனை கடுமையாகக்கண்டித்து, மிகப்பலமாக ஆட்சேபனை தெரிவித்து எதிர்த்து வாக்களித்து வந்தவர் மகேஸ்வரன் என்பது கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியலாளர்கள், புத்திஜீவிகள் அனைவருக்கும் தெரிந்ததே.
அவரது மீதமுள்ள பணியைத்தான் நாங்கள் தொடர்ந்தும் முன்கொண்டுசெல்ல விரும்புகின்றோம். எங்களாலும் உணர்ச்சிப்பெருக்கமாக தமிழ் தேசியம் பேசமுடியும். ஆனால் இங்கு தேவை அதுவல்ல. 
 
உண்மையாய், உரிமையாய், உணர்வாய் மகேஸ்வரன் அவர்களைப்போன்று ‘தமிழ்த்தேசியம் காக்கும் பணி, மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு’ இரண்டையும் ஒரு புகையிரத தண்டவாளம்போல சமாந்தரமாக கொண்டுசெல்ல நாங்கள் பிரயாசைப்படுகின்றோம்.   
இலங்கையில் இடம்பெற்ற சிறீலங்கா அரசின் மனிதகுலப்படுகொலைகள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், இந்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை, காலநீடிப்பு செய்யப்பட்டு செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் தற்பொழுது அந்த அறிக்கை கூட இனப்படுகொலை தொடர்பில் சிறீலங்கா அரசை பொறுப்புக்கூற வைக்கும் சர்வதேச வழிமுறையை தவிர்த்து உள்ளுர் விசாரணையை கோருவதாக செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் பெயரால் ஜெனிவா வரை பயணம் செய்து ‘சிறீலங்காவின் புதிய அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியவர்கள். இந்த அரசுக்காக பலதரப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளிடமும் பரிந்துபேசி அறிக்கையை ஒத்தி வைக்க காரணமாக இருந்தவர்கள், தற்பொழுது செப்டெம்பர் மாதம் வெளிவரவுள்ள அறிக்கை சர்வதேச விசாரணையை வலியுறுத்தவில்லை என்றானபோது, அதற்காக குரல் கொடுப்பார்கள். போராடுவார்கள். எதிர்த்தாக்குதல் தொடுப்பார்கள் என்று தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது மடமைத்தனமாகும்.
ஆனால் சமகால அரசியல் சூழலில் இன்று எங்கள் கூடவே மகேஸ்வரன் அவர்கள் இருந்திருக்க வேண்டும். ‘ஈழத்தில் நடைபெற்றது தமிழினப்படுகொலைதான்’ என்பதை உரத்துக்கூறியவாறு, சிறீலங்காவின் செங்கோல் காலி முகத்துவாரத்திலோ அல்லது ஹம்பாந்தோட்டை கடலிலோ தூக்கி வீசியெறியப்பட்டிருக்கும் என்றும் வைத்தியகலாநிதி சிவசங்கர் தெரிவித்தார்.
SHARE