மக்களின் தீர்ப்புக்கு எதிராக எவரும் செயற்படக்கூடாது

273
சுயநல அரசியலை நோக்காகக் கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கும் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி சுயலாபங்களை அடைந்து கொள்வதற்குமான முயற்சியில் இனவாத சக்திகள் முனைந்து வருகின்றன.

தேசிய அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் இனவாதத்தை தூண்டி சிங்கள மக்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியை மீளக் கைப்பற்றி விடலாம் என்ற நப்பாசையில் மஹிந்த அணியினர் செயற்பட்டு வருவதாகவே தெரிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியினை மாற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியினை மக்கள் தமது தீர்ப்பின் மூலம் கொண்டு வந்துள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து சிறுபான்மையின மக்கள் பெரும் ஆதரவை வழங்கியமையினாலேயே பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்தார்.

இதனையடுத்தே புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிலை உருவாகியிருந்தது. புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகள் இழுத்தடிப்புக்களுக்கு மத்தியில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாட்டில் இனவாதத்தைப் பரப்பி சிங்கள மக்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது உரைகளின் போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று முன்தினம் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக அன்று பந்தம் பிடித்தவர்கள் இன்றும் அவருக்கு பந்தம் பிடித்துக் கொண்டு நாட்டைக் குழப்புகின்றனர். அவற்றுக்கு அஞ்சி நாட்டைக் குழப்ப நாம் இடமளிக்கமாட்டோம். மஹிந்தவுக்கு மேளமடிக்கும் நபர்களுக்கு நாம் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. பிரிவினையுடன் நாட்டில் ஆட்சி செய்ய நாம் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாம் தற்போது பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தை பலப்படுத்தும் வகையில் அரசியலமைப்பை உருவாக்க அரசியலமைப்பு சபையை அமைத்துள்ளோம். நாட்டு மக்களுக்கு சரியான பொருளாதார வேலைத்திட்டங்களை வழங்கவேண்டிய தேவையுள்ளது. பொருளாதாரத்தைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பிரிவினையை வளர்ப்பதற்கு நாம் தயாராக இல்லை. கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் நபர் நானில்லை. எதிர்காலத்தை எண்ணியே எனது வேலைத்திட்டங்கள் அனைத்தும் அமைந்திருக்கும். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை சீரழிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

இதேபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாட்டில் வன்முறைகள் இடம்பெறுவதற்கோ, இனவாத சூழ்ச்சிகளுக்கோ இடமளிக்கப் போவதில்லை என்று உறுதிபட தெரிவித்திருக்கின்றார். இதனைவிட தெற்கிலிருந்தே நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்றும் அவர் அடிக்கடி கூறிவருகின்றார்.

ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்ற நிலையில் அதனை குழப்பியடிக்க முயலும் இனவாத சக்திகள் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை தற்போது உருவாகியிருக்கின்றது.

அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பெருமளவானோர் படுகாயமடைந்தனர்; அங்கவீனர்களாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். இவ்வாறு பல்வேறு துன்பங்களை தமிழ் மக்கள் அனுபவித்தனர்.

இதேபோல் முஸ்லிம் மக்கள் மீதும் திட்டமிட்ட வகையில் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. இவ்வாறு திட்டமிட்டவகையிலான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டபோது தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஜெனிவாவிற்கு சென்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை செய்திருந்தனர்.

அன்றைய ஆட்சிக்காலத்தில் எதிரணியினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜெனிவாவிற்கு சென்று சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடமும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களும் தமிழ், முஸ்லிம் தலைவர்களும் அன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவா சென்று முறையிட்டபோது அவர்களை அன்றைய அரசாங்கத் தரப்பினர் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகிகளாக சித்திரித்தனர்.

ஜெனிவா சென்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தினர். இதனைவிட ஐ.நா.வின் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஜெனிவா சென்றவர்களை துரோகிகளாக பார்த்த முன்னைய அரசதரப்பினர் தற்போது பொது எதிரணியினராக செயற்பட்டு வருகின்றனர்.

அவர்கள் தற்போது ஜெனிவா சென்று அரசுக்கு எதிராக முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர். பொது எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, உதய கம்மன்பில ஆகியோர் ஜெனிவாவிற்கு விஜயம் செய்து சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் எதிரணியில் பெரும்பான்மையான உறுப்பினர்களை தாம் கொண்டுள்ள போதிலும் தமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை என்பதுடன் பாராளுமன்றத்தில் தமக்கு பேசுவதற்குக் கூட உரிய நேரம் வழங்கப்படுவதில்லை என்றும் இவர்கள் முறையிட்டுள்ளதாக தெரிகின்றது.

உண்மையிலேயே ஜனநாயக நாடொன்றில் மனித உரிமைகள் மீறப்படுமானால் அல்லது எதிரணிக்கு அநீதி இழைக்கப்படுமானால் அந்த அணியினர் ஜெனிவாவிற்கு சென்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடமோ அல்லது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடமோ முறையிடுவதற்கு உரிமை உள்ளது.

80 களில் தென்பகுதிகளில் கிளர்ச்சி இடம்பெற்ற போது பெருமளவான இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் ஜெனிவாவிற்கு சென்று முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் ஜெனிவாவிற்கு சென்றிருந்ததை தேசத்துரோகமாக பார்த்தவர்கள் இன்று ஜெனிவா சென்று நியாயம் தே முற்பட்டிருக்கின்றனர்.

எனவே, இப்போதாவது பொது எதிரணியினர் தமது தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் நாட்டு மக்கள் தமது தீர்ப்பினை வழங்கிவிட்டனர். புதிய நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவினை அவர்கள் தெரிவித்து விட்டனர். எனவே, 2020 ஆம் ஆண்டு வரையில் புதிய ஆட்சிக்கான ஆணை வழங்கப்பட்டிருக்கின்றது.

மக்களின் ஆணைக்கிணங்க நல்லாட்சி அரசாங்கம் தமது திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்வரும் நான்கு ஆண்டு காலம் எதிரணியினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமாகும். அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கி நாட்டை முன்கொண்டு செல்வதற்கு எதிரணியினர் முன்வரவேண்டும்.

இதனைவிடுத்து, மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயற்படுவதோ, நாட்டில் இனவாதத்தை வளர்த்து சிங்கள மக்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதோ முறையான செயற்பாடல்ல.

எனவே, இந்த விடயம் தொடர்பில் பொது எதிரணியினர் எனக் கூறிக் கொள்பவர்கள் சிந்திக்க வேண்டும். இனியாவது வீண் குழப்பங்களை ஏற்படுத்துவதை விடுத்து புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

namal_wimal

SHARE