
மக்களின் நலன்களை முதனிலைப்படுத்தி கடமையாற்றுமாறு ஊடகங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக ஊடக சுதந்திர தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஊடக உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியனவற்றை வலியுறுத்தி ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது என இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக கண்காணிக்கும் புலனாய்வு செய்யவும், கொள்கைகளை விமர்சனம் செய்யக்கூடிய சூழ்நிலை காணப்பட்டாலே அது நல்லாட்சி என கருதப்பட முடியும் என பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் ரொக்வுட் தெரிவித்துள்ளார்.
ஊடகப் பணிகளை மேற்கொண்டு உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்வதற்கும், ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கும் இது சிறந்த தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி அறிக்கையிடலில் துல்லியத்தன்மை மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ, சுய லாப நோக்கிலோ செயற்படாமல் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பொது மக்களின் நலன்களை உறுதி செய்யும் வகையில் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.