மக்களின் பணம் எனக்கு வேண்டாம்! சமுதாயத்திற்கு பணியே செய்கிறேன்! அமைச்சர் சுவாமிநாதன் .

242
swami

பணம் எனக்கு தேவையில்லை. எனது மூதாதையர் பணம் கொடுத்துள்ளனர், நானும் 45 வருடகாலம் சட்டத்தரணியாக கடமையாற்றியவன், இறைவன் எனக்கு கொடுத்தது போதும். எனவே நான் பொதுமக்களிடமிருந்து பணத்தை எடுக்கத் தேவையில்லை என்று மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு, தங்கவேலாயுதபுரம், மீள்குடியேற்றக் கிராமங்களில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட 100 வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து பேசுகையில்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சத்து 32 ஆயிரம் வீடுகள் தேவை. ஆனால் முதலில் 65 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்கப்பதற்கு திட்டமிட்டோம். இந்த வீடுகளை கட்டுவதற்கு இன்று அரசாங்கத்தில் பணமெடுக்க முடியாது.

இவ் வீடுகளை எவ்வாறு கட்டிக்கொடுக்க முடியும் என அறியாது பத்திரிகைகளில் எழுதுகின்றனர். அரசில்வாதிகள் பாராளுமன்றத்திலே பேசுகின்றனர். எனவே இதற்கான பணத்தை எவ்வாறு பெறுவது என அறிந்து பேசுவது நன்று.

இந்த 65 ஆயிரம் வீடுகளை கட்டும் திட்டத்தில் ஒரு அதிகாரம் கொண்ட கம்பனி பணத்தை கொண்டுவந்து அந்த பணத்தை திருப்பி அரசாங்கம் 12 வருட காலத்தில் கொடுக்க முடியுமானால் தான் அந்த வீடுகளை கட்ட முடியும். அதற்காகவே நாங்கள் இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் சர்வதேச ரீதியாக விளம்பரம் செய்தோம்.

அதில் உலகத்திலே பிரபல்யமான 56 கிளைகளைக் கொண்டதும் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் வேலை செய்யும் முதலாவது பெரிய கம்பனியுடன் ஒப்பந்தம் செய்தோம்.

மக்களுக்கு ஒரு முன்னேற்றத்தை கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இருக்கின்ற நிலையில் அல்லவா இருக்கவேண்டும். அப்படி முன்னேற்றம் இல்லாது வாழவேண்டுமா?

எனக்கு பணம் தேவையில்லை. எனது மூதாதையர் பணம் கொடுத்துள்ளனர், நானும் 45 வருடகாலம் சட்டத்தரணியாக கடமையாற்றியவன். இறைவன் எனக்கு கொடுத்தது போதும். நான் பொதுமக்களிடமிருந்து பணத்தை எடுக்கத் தேவையில்லை. என்று மிக தெளிவாக இந்த மேடையில் சொல்லுகின்றேன்.

நீங்கள் பத்திரிகையில் எழுதினால் ஒரு சமர்ப்பணம் செய்வதில் ஒர் அடிப்படையை செய்யுங்கள். நீங்கள் உங்களுக்கு வேண்டியதை எழுதினால் அதனை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். நான் பிழை செய்திருந்தால் அதனை ஏற்பதற்கு தயார்.

பிரான்சில் இருந்து திட்டம் கொண்டுவரப்பட்டு விஞ்ஞான ரீதியாக சகல துறைகளையும் ஆராய்ந்து 30 வருட உத்தரவாதத்துடன் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இன்று பத்திரிகையொன்றில் அந்த வீட்டு ஜன்னலுக்கு கம்பி போடவேண்டும் என எழுதுகின்றனர். அது போடவேண்டும். அவ்வாறே சில சில குறைகள் உள்ளன. அதனை திருத்தி செய்யவுள்ளோம். அதனை ஏற்றுக் கொள்கின்றேன்.

30 வருட காலம் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் , முஸ்லிம், சிங்கள மக்களுக்கு வேண்டியதை கொடுக்கவேண்டும். அந்த மக்களுடைய வாழ்கை தரத்தை கூட்ட வேண்டும் அவர்களும் இவ்வாறான வீடுகளே தேவை என்கிறார்கள்.

தற்போது திறந்து வைத்துள்ள வீடுகள் தொடர்பாக நான் பேச விரும்பவில்லை ஆகையினால் அப்படியான வீடுகளை கொடுத்தால் திரும்ப அதே நிலையில் தான் மக்கள் இருப்பார்கள். அப்படியான நிலைதான் உங்கள் அரசியல் வாதிகளுக்கு வேண்டும். அதைத்தான் இந்த அரசியல்வாதிகள் கேட்கின்றார்கள்.

ஏன் காஸ் கொடுத்துள்ளதாக சிலர் கேட்கிறார்க்ள. இன்று விறகு ஒருகிலோ வாங்குவதற்கு 15 ரூபா தேவை. இவ்வாறாயின் மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபா தேவை ஆனால் காஸுக்கு ஆயிரத்து 450 ரூபா மட்டும் தான்தேவை.

கட்டப்படும் வீடு 3 தொன் நிறையுடையது. அதந் வீட்டை ஆட்டமுடியாது. அந்த வீட்டை கையால் ஆட்டமுடியும் என்று ஒரு அரசியல் வாதி கூறினார். 3 தொன் வீட்டை ஆட்டவேண்டுமென்றால் சுப்பர் மான் தேவையாகும். அப்படியான சுப்பர் மான் இலங்கையில் இல்லை என நினைக்கின்றேன்.

அப்படி அந்த வீட்டை ஆட்டினால் நான் மில்லின் ரூபா கொடுப்பதற்கு தயராகவுள்ளேன். நான் அந்த அரசியல் வாதியுடன் பந்தயம் பிடிப்பதற்கும் தயாராகவுள்ளேன். இந்த வீடுகளை கட்டிக் கொடுக்கும் போது தளபாடம், ரிவி, சூரிய ஒளி மின்சாரம், காஸ் என்பன கொடுக்கின்றோம்.

எனவே அதனை நான் செய்து முடிப்பேன் பிரச்சனை இருந்தால் ஏதும் பிழையிருந்தால் அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். செய்யாத பிழையை நான் எப்படி ஏற்றுக்கொள்வது. ஒவ்வொரு நாளும் பத்திரிகையில் போடுகின்றனர்.

நான் இப்படி வீடுகளை கட்டிக் கொடுத்தால் உங்கள் அரசியல் வாதிகளுக்கு பயமாக இருக்கின்றதா? அரசியல் வாதிகள் பயப்படத் தேவையில்லை. உங்களுக்குத்தான் நான் செய்கின்றேன். உங்கள் கட்சிக்குத்தான் செய்கின்றேன். உங்கள் கட்சிக்கு செய்யவேண்டாம் என்றால் நான் செய்யமாட்டேன்.

நான் யாழ்ப்பாணத்திலே மட்டக்களப்பிலே வாக்கு கேட்க தேவையில்லை. தமிழரசு கட்சிக்கு இன்னும் ஆதரவு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் நான் இதனை செய்கின்றேன்.

நான் சமுதாயத்துக்கு செய்யவேண்டிய கடமையை செய்கின்றேன். ஜனாதிபதியும் பிரதமரும் என்னிடம் கொடுத்த கடமையை செய்கின்றே.ன் அந்த கடமையை செய்வதற்கு இவர்கள் விடுவதாக இல்லை.

சொல்வது எல்லாம் பொய்யாவுள்ளது., உண்மையைச் சொன்னாலும் பரவாயில்லை. இந்த திட்டத்தில் களவு செய்வதாகவும் இல்லாததொன்றை கூறுகிறார்கள்.

எனவே எழுதுவதை சரியான முறையில் எழுதவும். மக்களுக்கு கடமையை செய்யவேண்டும் என்றால் அந்த கடமையை செய்யுங்கள். என்றார்.

SHARE