மக்களை பல கூறுகளாகப் பிரிப்பதன் மூலம் தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஆளும் தரப்பினர் அன்றிலிருந்து இன்று வரை செயற்பட்டு வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 117 ஆவது ஜனன தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஆனால் மக்களை பல கூறுகளாகப் பிரிப்பதன் மூலம் தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஆளும் தரப்பினர் அன்றிலிருந்து இன்று வரை செயற்பட்டு வருகின்றனர். இதன் மூலம் தமது குறிக்கோள்களை இலகுவில் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கின்றனர்.
எம்மை கூறுபோடும் வேலைத்திட்டத்திற்கு இடமளிக்காது மக்களுக்கான வேலைத் திட்டத்தை தாம் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.