
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த வத்தளை உடற்பயிற்சி நடைபாதை அகற்றல் சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஜோன் அமரதுங்க இருப்பதாகவும், இந்த விடயம் தொடர்பாக பாரிய தொகையொன்று கைமாறி இருப்பதாகவும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்திருந்தனர்.
எனினும் குறித்த சம்பவத்தில் தனக்கு எதுவித தொடர்புகளும் இல்லை என்று மறுத்திருந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, கடந்த ஆட்சிக்காலத்தில் குறித்த நடைபாதை நிர்மாணத்தின் போது பாரிய மோசடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் ”எந்தக் கொம்பனுக்கும் பயந்து” தான் மீண்டும் நடைபாதையை அமைக்கப் போவதில்லை என்றும் அவர் சூளுரைத்திருந்தார்.
இந்நித லையில் குறித்த சம்பவம் பொதுமக்களின் பெரும் எதிர்ப்பை சம்பாதித்திருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு கடுமையான முறையில் எச்சரித்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் வத்தளையில் அகற்றப்பட்ட நடைபாதை நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நடைபாதையை அகற்றவும் , அதனை மீண்டும் நிர்மாணிக்கவும் பொதுமக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவது குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.