மக்கள் தமக்கு கொடுக்கப்படும் திட்டங்களை கொண்டு தமது பிள்ளைகளது எதிர்கால கல்வியை வளப்படுத்தவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவிப்பு…
வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால், கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான தளபாட தொகுதிகள் மற்றும் சமையல் பாத்திரத் தொகுதிகள் வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ள நிலையில், 25-07-2016 திங்கள் மாலை 2.30 மணிக்கு வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சங்கங்களுக்கான பொருட்களும், அதே வேளை திணைக்களத்தால் தையல் பயிற்றப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் என்பன வழங்கும் நிகழ்வும் வவுனியாவில் உள்ள கிராம அபிவிருத்தி திணைக்கள பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் மும்மதத் தலைவர்கள், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.ஜெயதிலக, அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன், வவுனியா தெற்கு உதவி பிரதேச செயலாளர் ஆர்.ஆனந்த, வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.என்.கேதீசன், வவுனியா மாவட்ட மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய கிராம அபிவிருத்தி அமைச்சர், வழங்கப்படும் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும், இப்பொருட்களை கொண்டு கிராமமட்ட சங்கங்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றும், ஏற்கனவே அரசால் வழங்கப்பட்ட பல திட்டங்கள் இன்று கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்கும்போது மக்கள் அசமந்தமாக நடந்துள்ளதே காரணம் என்றும், எல்லா திட்டங்களும் சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது நமது மக்கள் வாழ்வாதாரத்தில் உயரமுடியும் என்றும், மேலும் அவர் பொருட்களை பெறும் கிராம மட்ட சங்கங்கள் மரண சடங்குகளுக்கு பாத்திரங்கள் மற்றும் கதிரைகளை இலவசமாக வழங்கி உதவி செய்யுமாறும் , ஏனைய நிகழ்வுகளுக்கு குறைந்த வாடகையில் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அத்தோடு இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வருமானத்தை ஈட்டி அதனை தமது பிள்ளைகளது எதிர்கால கல்விக்கு பயனுள்ளதாக பயன்படுத்தவேண்டும் அவ்வாறு வளர்ச்சியடையும் சங்கங்களுக்கு தொடர்ந்து அபிவிருத்திக்கான உதவித்திட்டங்களை தான் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.