மடுமாதாவின் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

148
மடுமாதாவின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10 இற்கு பயணத்தை ஆரம்பித்துள்ள விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து நாளையும் காலை 8.10 இற்கு புறப்படவுள்ள அந்த விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
நாளை மறுதினம் பிற்பகல் 3.30 இற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள விசேட ரயில், இரவு 10.18 இற்கு நீர்கொழும்பை வந்தடையவுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 10.45 இற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ள மற்றுமொரு விசேட ரயில், மாலை 6.51 இற்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக நாளாந்தம் கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் ரயில்களுடன் மேலதிகமாக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மடு யாத்திரையில் ஈடுபடுகின்றவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் மற்றும் கழிவறை வசதிகளை மடு ரயில் நிலையத்தில் ஏற்படுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மன்னார் மடுமாதா திருத்தலத்தின் பெருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த 6 ஆம் திகதி முதல் கொடியேற்றத்துடன் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறவுள்ள பெருவிழா தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி காலை கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
SHARE