மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது நாக்கின் கீழ்ப்பகுதி உமிழ்நீர்ச் சுரப்பியிலிருந்து 5 சென்ரி மீற்றர் நீளமும் 25 கிராம் எடையும் கொண்ட கல் ஒன்று அகற்றப்பட்டுள்ளது.
உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடி 5ஆம் குறிச்சி குபா பள்ளி வீதியைச் சேர்ந்த 47 வயதான கச்சி முஹம்மது முபாறக் என்பவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போதே, அவரது நாக்கின் கீழ்ப்பகுதியிலிருந்து குறித்த கல் அகற்றப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சை குறித்து சத்திரசிகிச்சை நிபுணர்கள் கூறும்போது, வாய்க்குள் அறுவைச் சிகிச்சை செய்து கல் அகற்றுவது அபூர்வமாக நடக்கும் சம்பவமாகும் என்று குறிப்பிட்டனர்.
அத்துடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இது இரண்டாவது சம்பவமாகும் என்று குறிப்பிட்ட வைத்தியர்கள், குறித்த கல் மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர்.