இந்த நாட்டில் இலங்கைப் பிரஜையாக இருந்து கொண்டு 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. இவைகளனைத்திற்கும் அடிப்படையில் இலங்கைப் பிரஜையாக இருந்து கொண்டு 18 வயதைப் பூர்தி செய்தவுடன் தேர்தல் இடாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாற்றுத் திறனாளியும் சட்டத்தரணியுமான யு.எல்.அலிசக்கி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் உரிமையும் அரசியல் பங்களிப்பும் எனும் தொனிப் பொருளின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச கதிரவன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று(03) வெல்லாவெளியில் அமைந்துள்ள இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்காளர்கள் வாக்களிக்கும் முன்னர் அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு வாசித்து அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை படித்து அறிந்தால்தான் மக்களுக்காக யாரெல்லாம் அதிகளவு சேவை நோக்குடன் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு எப்படியான சலுகைகள், உரிமைகள் என்பன அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன என அறிந்து, அதன் பின்னர் நாம் விரும்பிய கட்சியைச் சேர்ந்த விரும்பிய வேட்பாளரை தெரிவு செய்யலாம். அதே போன்று மாற்றுத் திறனாளிகளும் தேர்தல்களில் போட்டியிடலாம். அவற்றுக்காக நாம் முதலில் எமது பெயர்களை சரியாக வாக்காளர் பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளாகிய நாமும் அரசியல் கட்சிகளிடமும் எம்மைப் பற்றியும் மாற்றுத் திறனாளிகளின் தேவைகள், குறைபாடுகள், பிரச்சினைகள் பற்றியும் எடுத்தியம்ப வேண்டும். அவ்வாறு அரசியல் கட்சியினருக்கு எமது பிரச்சினைகள் குறித்து தெரிவித்தால்தான் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் மாற்றுத் திறனாளிகள் பற்றிய கருதுக்களை வெளியிடுவார்கள். எனவே மாற்றுத் திறனாளிகளாகிய எமது பிரச்சினைகள் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எடுத்துச் சொல்லப் பின்னிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேச கதிரவன் மாற்றுத் திறனாகிகள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கமீட் நிறுவனத்தினால் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்வில் மேற்படி அமைப்புக்களின் நிருவாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.