மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

219

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வுகளை 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டமும் பேரணியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டோர் “ தமிழ் மொழிமூல நுண்கலை பட்டதாரிகளை புறக்கணித்தது ஏன்?, மத்திய அரசே மாகாண அரசே பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனம் வழங்கு, பட்டதாரிகள் தொடர்ந்தும் வீதியிலா?” போன்ற சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் போது வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்களும், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களிலும் 5000 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றுக்கு பயிற்சி அடிப்படையிலாவது பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு வெளி மாவட்டங்களில் வழங்கிய ஆசிரிய நியமனங்களை கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்வதை கிழக்கு மாகாணசபை நிறுத்தவேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டு வெளியாகும் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை அதிகரிக்காததன் காரணமாகவே இவ்வாறான போராட்டங்கள் நடாத்தப்படுகிறது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால் இங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE