மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடியில், படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று (புதன்கிழமை) சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள படை முகாமுக்கு முன்னால் கூடாரமிட்டே, குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவலடி பகுதியில் வசித்த குறித்த மக்கள் இடம்பெயர்ந்து, தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
நாட்டில் தற்போது சுமூகமான சூழ்நிலை நிலவும் நிலையில், படையினர் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்துள்ள தமது காணிகளை மீட்டுத் தருமாறு இம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது வீடுகள், கடைகள் உள்ளடங்கலாக அசையும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் படையினர் அழித்து விட்டே இப் பகுதியில் இராணுவ முகாமை அமைத்துக் கொண்டதாக இப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.