மட்டன் சமோசாவுக்காக கூகுள் வேலையை விட்ட இளைஞர்

220

கூகுள் நிறுவனத்தின் வேலையை துறந்து மட்டன் சமோசா விற்பனைக்கு வந்திருக்கிறார் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான முனாப் கபாடியா, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது தாயார் நபிசா செய்யும் உணவுப் பண்டங்களைக்கொண்டு உணவகம் ஒன்றைத் தொடங்க முனாப் திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து தமது உணவகத்தில் முக்கியமாக விற்கப்போகும் உணவுகளை சோதிக்க வித்தியாசமான திட்டம் ஒன்றையும் முனாப் செயல்படுத்தியுள்ளார்.

இதற்காக தனது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் ஓர் இரவு தமது வீட்டில் உண்பதற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார் முனாப். அப்போது, அம்மா கையால் சமைத்த, விற்பதற்கு திட்டமிட்டுள்ள உணவுகளை அனைவருக்கும் பரிமாறி ருசி எப்படி? என்று அறிந்திருக்கிறார்.

இது போதாது என்று நினைத்த அவர், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் கருத்தையும் அறிய, பேஸ்புக்கில் Word of Mouth என்ற பெயரில் தொடர்ந்து பதிவிட்டு மகளிர் குழுவினர் சிலரை தன் வீட்டிற்கு அழைத்து மற்றொரு விருந்து வைத்துள்ளார்.

பின்னர், போஹ்ரி கிட்சென் என்ற பெயரில் உணவகம் ஒன்றை மும்பையின் வார்லி பகுதியில் திறந்துள்ளார். எதிர்பார்த்ததைப் போலவே தனது உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததும் ரொம்ப பிசி ஆகிவிட்ட முனாப், தனது கூகுள் பணியையும் துறந்துவிட்டார்.

இதனையடுத்து முழுவீச்சில் போஹ்ரி கிட்சென் வேலைகளை கவனிப்பதில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். தனது வெற்றிக்குக் காரணமான தொழில் தந்திரத்தை வெளிப்படையாக சொல்லும் முனாப், தன் அம்மாவின் கையால் செய்த மட்டன் சமோசா விற்பதற்காகவே கூகுளில் பார்த்த வேலையை விட்டுவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.

SHARE