குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்களென சந்தேகிக்கும் சிங்கள நடிகையொருவர், சட்டத்தரணியொருவர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகிய மூவரையுமே இவ்வாறு கைது செய்யுமாறு நீதிபதி மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
மனற்காட்டுப்பகுதியில் விடுதலைப்பபுலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைகளை கடந்தமாதம் கொழும்பில் இருந்து வந்த குழுவொன்று தோண்ட முற்பட்டது.
மேற்படி சம்பவத்தில் பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிசாரால் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் தென்பகுதியைச் சேர்ந்த பிரபல நடிகை மற்றும் பிரபல சட்டத்தரணி மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகிய மூவர் முக்கிய சந்தேகநபர்களாக கருதி அவர்களையும் நீதிமன்றில் முற்படுத்துமாறு அழைப்பாணை கடந்தமுறை வழங்கப்பட்டிருந்தது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும் தென்பகுதியைச் சேர்ந்த மேற்படி மூவரும் பொலிசாரால் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை.
எனவே மூவரையும் உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் குறித்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்க மறியலும் எதிர்வரும் 17ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.