மணல் திருடர்கள் நால்வரை விடுதலைசெய்த நான்கு பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்!

188

vauneja-polices

தங்கொட்டுவ, ஜங்குராவௌ பிரதேசத்தில் மாஓயாவில் மணல் அகழ்ந்துகொண்டிருந்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்ட ஐவரில் நால்வர் விடுதலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின் பின் அச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தங்கொட்டுவ பிரதேசத்தின் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, இரு சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு சார்ஜண்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகிய நால்வருமே இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தங்கொட்டுவ பொலிஸ் வலயத்துக்குட்பட்ட கரகடுவெல பகுதியில் பெருமளவு மணல் சட்டவிரோதமாக அகழப்படுவதாக புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பிக்க சிறிவர்தனவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து அவர் அவ்விடத்தை சுற்றிவளைக்குமாறு தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

பின் பொலிஸ் குழுவொன்று அவ்விடத்தை சுற்றிவளைத்து ஐந்து பேரைக் கைதுசெய்ததுடன், மணல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட இரு படகுகளையும் கைப்பற்றியது.

அதன்பின் கைதுசெய்யப்பட்ட ஐவரில் நால்வர் விடுதலைசெய்யப்பட்டமை தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

SHARE