கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கண்டி நுவரெலியா பிரதான பாதை இறம்பொடையில் பாதை அபிவிருத்திக்கு காபட் கலவையினை உற்பத்தி செய்வதற்கு என கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட காபட் கலவை உற்பத்தி செய்யும் வேலைத்தளத்தின் பல கோடி பெறுமதியான இயந்திரங்கள் தற்போது கழற்றப்பட்டு பலாங்கொடை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் மலையக பாதைகளை அபிவிருத்தி செய்யும் போது அதற்கான காபட் கலவையினை வெகு தூரத்தில் இருந்து கொண்டு வருவதினால் ஏற்படும் போக்குவரத்து செலவினையும் காபட் கலவை கட்டியாக மாறுவதினால் பாதை அபிவிருத்திக்கு பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டதினால் இந்த காபட் கலவை உற்பத்தி செய்யும் வேலைத்தளம் உருவாக்கப்பட்டது.
தற்போது இந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் இதனை அகற்றி பிரிதொரு இடத்தில் அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த வேலைத்தளம் அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து சுமார் 3 வருடங்கள் எந்த வித பாவனையும் இன்றி பாவிக்கப்படாமல் உக்கி துருப்பிடித்து காணப்பட்டது. மக்களின் பணத்தில் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இச்செயற்திட்டம் வீணற்றுப் போனது கவலைக்குரிய விடயமாகும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.