பிணை முறிகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவே அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளை வஜிரராம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 2015ம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறிப் பத்திர மோசடிகளினால் நாட்டில் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவும் அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவத்தை மறைத்துக் கொள்ளவும் வற் வரி அறவீடு செய்யப்படுகின்றது.
வற் வரி அதிகரிப்பின் ஊடாக 100 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எனினும் மத்திய வங்கி பிணை முறி ஊழல் மோசடிகளினால் நாட்டுக்கு 145 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசாங்கத்தின் வற் வரி அதிகரிப்பு இந்த மத்திய வங்கி மோசடியினால் ஏற்பட்ட நட்டத்தைக் கூட ஈடு செய்ய போதுமானதல்ல.
கடந்த மார்ச் மாதம் மீளவும் அரசாங்கம் பிணை முறிகளை வெளியிட்டு 14.23 வீத வட்டிக்கு கடன் பெற்றுக்கொண்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 6 வீதமாக காணப்பட்ட வட்டியே இவ்வாறு அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி நிதி மோசடிகள் குறித்து மீளவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பந்துல குணவர்தன கோரியுள்ளார்.