மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து மௌனம்! நிபந்தனைகளுக்கு இலங்கை சம்மதம்?

208

ஐ. நா. மனித உரிமை ஆணையத்தின் நிகழ்கால கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விவாதிக்கப்படாமல் இருக்க இருதரப்பு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.

மனித உரிமை ஆணையம் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், வட, கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைத்தல், வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் ஆகிய நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்திடம் விதித்துள்ளது.

இதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதன் காரணமாகவே மனித உரிமை ஆணையத்தின் மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவகாரம் விவாதிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு எதிர்வரும் ஜுன் மாதமளவில் விசேட நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் ஆணையத்துக்கு உறுதியளித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரங்கள் எதிர்வரும் 2017ம் ஆண்டு வரை மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட மாட்டாது என்றும் சிங்கள ஊடகத்தின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE