மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யும் நிலைய வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து குறித்த நிலையத்தில் சாரதியாக கடமையாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் சிறுநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் ஜெயராம்(வயது-54) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் நீண்டகாலமாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் குறித்த நிலையத்தில் சுமார் 6 வருடங்களாக சாரதியாக கடமையாற்றி வருகின்றார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த ஏற்றுமதி நிலையத்தில் இருந்ததாகவும் இன்று திங்கட்கிழமை காலை குறித்த நபரை காணவில்லை எனவும் அவரது படுக்கை விரிப்பு காணப்பட்ட நிலையில் அவரை தேடிய போது அருகில் உள்ள கிணற்றில் சடலமாக காணப்பட்டதாக குறித்த நிலையத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது வவுனியாவில் இருந்து விசேட தடயவியல் நிபுணத்துவ பிரிவு பொலிஸாரும் வருகை தந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டார். .அதனைத் தொடர்ந்து மாலை 2.45 மணியளவில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதோடு நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு முன்னிலையில் சடலம் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
சடலத்தை பார்வையிட்ட மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா சடலப் பரிசோதனைகளுக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இவரது மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.