மன்னாரில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்

181

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாண தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் இன்று அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும் வடமாகாண தனியார் போக்குவரத்துச் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று(24) காலை முதல் மன்னாரில் இருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரசத் திணைக்களங்களில் கடமையாற்றுகின்றவர்கள் என அனைவரும் அரச பேருந்துகளிலே தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்டதுப்பாக்கிச்சூட்டு சம்பம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று எனவும் குறித்தசம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லூரில் நீதிபதி இளஞ்செழியன் மீது இலக்கு வைத்துமேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.

குறித்த சம்பவம் வருத்தத்திற்குரியதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுமாகும். நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள சவாலாகவும், சுதந்திரமான நீதித்துறையை நடத்த விடாமல் தடுக்கின்ற ஒரு நிகழ்வாகவும் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். இதன்போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவருடைய குடும்பத்தினருக்கு மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.அத்தோடு, குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நீதிபதி இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸார் தெரிவித்த கருத்தை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதனை நாங்கள் ஏற்கப்போவதும் இல்லை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE