மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகள், பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
கடற்படையினர் நிலைகொண்டுள்ள குறித்த காணியை அளவீடு செய்து கடற்படைக்கு கொடுப்பதற்காக, இன்று (செவ்வாய்க்கிழமை) நில அளவீட்டாளர்கள் அங்கு சென்றிருந்த நிலையில் அவர்களை குறித்த பகுதிக்குள் செல்லவிடாமல் மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இக் காணிகளை கடற்படைக்கு வழங்கினால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் பாதிக்கப்படுமென தெரிவித்து, இக்கிராம மக்களின் பிரதிநிதிகள் மன்னார் பிரதேசச் செயலாளரிடம் நேற்று முறையிட்டுள்ளனர். அத்தோடு, குறித்த காணி தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கொன்றும் விசாரணையில் உள்ளது. இவ்வாறான நிலையிலேயே இன்றைய காணி அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருந்தது. எனினும் மக்கள் எதிர்ப்பால் குறித்த காணி அளவீட்டு நடவடிக்கை இரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், நகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் அந்தோனி சகாயம் ஆகியோர் சென்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், குறித்த காணி அளவீட்டை நிறுத்துமாறு கோரி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியில் கடந்த 1956ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர், யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றிருந்த நிலையில், சுமார் 25 வருடங்களாக இக் காணி அரச கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தற்போது கடற்படையின் முகாமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.