-மன்னார் நகர் நிருபர்-
மன்னார் நகர சபையின் கீழ் உள்ள மன்னார் சிறுவர் பூங்காவின் அபிவிருத்தி பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (18) சிறுவர்களின் பாவனைக்காக குறித்த பூங்கா திறந்து விடப்படவுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் பாதீட்டு நிதியின் கீழ் சுமார் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த சிறுவர் பூங்கா புனரமைப்பு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பூங்காவில் மேலதிகமாக சிறுவர்கள் விளையாடக்கூடிய விளையாட்டு உபகரணங்களும் பூட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மன்னார் நகர சபையின் கட்டுப்பாட்டில் குறித்த சிறுவர் பூங்கா காணப்பட்ட போதும் கட்டுப்பாடுகளையும் மீறி இளைஞர்களும், பெரியவர்களும் குறித்த பூங்காவை பயண்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சிறுவர்களின் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் முதல்வர் தலைமையில் புனரமைப்பு பணிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் ஆகியோர் இன்று திங்கட்கிழமை(17) காலை சிறுவர் பூங்காவை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து மன்னாரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும் அரச மற்றும் தனியார் பேரூந்து தரிப்பிடங்களை பார்வையிட்டதோடு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



