மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுப்பதாக கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மன்னாரிற்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
பின் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று மதியம் மன்னார் கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் அதன் உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அமைச்சர் றிஸாட் பதியுதீனின் மாவட்ட இணைப்புச் செயலாளர் என். எம்.முனவ்பர் உற்பட மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மீனவர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுகையிலேயே கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் லைலா வலை, சுருக்கு வலை, டைனமெற் வெடி பொருள் பயன்படுத்துதல், கடலில் பற்றை வைத்து மீன் பிடித்தல் போன்ற மீன்பிடி முறைமைகள் தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தடை செய்யப்பட்டுள்ள தொழில் முறைமைகளை பயன்படுத்தி பலர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சிறு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
பலர் இங்கு என்னிடம் முறையிட்டுள்ளனர். எனவே தடை செய்யப்பட்டுள்ள மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் முன் வர வேண்டும்.
குறிப்பாக டைனமெற் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், டைனமெற் வெடி பொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதன் மூலம் ஏனைய மீனவர்கள் பாதிப்படைகின்றனர்.
அது மட்டுமின்றி இந்திய மீனவர்கள் இலுவைப்படகுகள் மூலம்(டோலர்) எமது கடற் பிராந்தியங்களுக்குள் வருகை தந்து மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்.
அது எனது பிரச்சினையும் இல்லை உங்களின் பிரச்சினையும் இல்லை. எமது நாட்டுப்பிரச்சினை என நான் கருதுகின்றேன்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தங்கி இருந்தேன்.
இதன் போது அப்பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுதாக நிறுத்துமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் இந்திய மீனவர்களின் வருகையை நேரடியாக நான் அவதானிக்க கடற்படையினரின் உதவியுடன் அப்பிரதேசத்து கடலில் சென்றேன்.
அப்போது சுமார் 100 இற்கும் அதிகமான இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகள் எமது கடற்பரப்பினுள் வருவதை நான் நேரடியாக அவதானித்தேன்.
அந்த வகையில் நான் கடற்படை அதிகாரிகளிடம் அறிவுரை வழங்கினேன். இலங்கை கடற்பிராந்தியத்தினுள் நுழைகின்ற இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த வருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும்.
என அவர் தன் உரையில் தெரிவித்தார்.
மன்னாருக்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர் மன்னார் கோந்தைப்பிட்டி பகுதியில் மீன்பிடி இறங்கு துறைமுகம் அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டதோடு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இறங்குதுறைகள் அமைக்கப்படவுள்ள இடங்களை பார்வையிட்டார் மகிந்த அமரவீர
மன்னாரில் இறங்குதுறைகள் அமைக்கப்டவுள்ள இடங்கள் உட்பட பல இடங்களை கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று பார்வையிட்டார்.
இவ் விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் அரசியல் பிரமுகர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் எருக்கலம்பிட்டி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் சென்று கேட்டு அறிந்தார். அதனை தொடர்ந்து காட்டாஸ்பத்திரியில் அமைந்துள்ள நண்டு ஏற்றுமதி நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இங்கு நண்டு ஏற்றுமதி மற்றும் பணியாட்களின் பிரச்சினகள் உள்ளிட்டவற்றை கேட்டு அறிந்து கொண்டார்.
இதன் பின் பேசாலைக்கு சென்ற அமைச்சர் அரச ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் அப்பகுதி கடலுக்கு சென்று பார்வையி;ட்டு மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டார்.
இதன்போது பேசாலை மக்கள் தமக்கு நவீன இறங்குதுறை ஒன்றை அமைத்து தரும்படி கோரினர்.
இதனை அடுத்து பேசாலை பங்கு தந்தை அமைச்சரிடம் பேசாலை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றினை வழங்கிவைத்தார். அதன்பின் அமைச்சர் சவுத்பார் கடற்பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.
பின் மன்னார் கோந்தபிட்டி கடற்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். இதன் பின் மன்னார் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அலுவலக மண்டபத்தில் அமைச்சருக்கும் மீனவர்களுக்கும் இடையில் சந்திப்போன்று நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதேவேளை இன்று வங்காலை மற்றும் சிலாவத்துறை பகுதிக்கும் அமைச்சர் விஜயத்தினை மேற்கொண்டார்.