மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பிலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று இடம் பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 3.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக மாவட்டத்தில் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மக்களின் இடப்பெயர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் நிலை குறித்தும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
குறிப்பாக வெள்ள நீரை வெளியேற்றுதல் மற்றும் பாதிக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடைய வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறித்த வெள்ளப்பெருக்கினால் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், என்.மஸ்தான்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, றிப்கான் பதியுதீன்,
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல், மாவட்ட அனார்த்த முகாமைத்துவப் பிரிவின் இணைப்பாளர் எம்.றியாஸ், பிரதேசச் செயலாளர்கள், இராணுவம், பொலிஸ், கடற்படை உயரதிகாரிகள், திணைக்களத்தின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.