மரணங்களும் அஞ்சலிகளும் – தேவஅபிரா

226

சில  நாட்களுக்கு  முன்பு  எக்ஸ் கதிர்ப்  பரிசோதனைக்காக (Computer  tomography) ஒருவர் வந்திருந்தார். உதைபந்தாட்டக்காரன் ஒருவனின் கம்பீரத்தோடு இருந்த அவரின் சிறு நீர்ப்பையில்  இருந்து சிறுநீர் வழி ஆரம்பிக்கும் பகுதியைச்  சுற்றி இருக்கும் புரொஸ்ரேற் (prostate) சுரப்பியிற் புற்றுநோய் தோன்றியிருந்தது. பரிசோதனைக்குத் தேவையான மருந்தை  உட்செலுத்தும் ஊசியை அவருடைய நாளத்தில்  ஏற்றுவதற்காக  அவரைத் தயாரிப்பறைக்கு அழைத்துச் சென்றபொழுது  உரையாடத் தொடங்கினார்.  `

நான்கு  மாதங்களுக்கு  முன்புதான் என் மனைவி வயிற்றிற் புற்று நோய் வந்து  இறந்து போனார்.  அவரை  வழியனுப்பி விட்டு  வந்த பின்னர்  எனக்கும்  அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து  கொண்டேன் ’  எனச்  சிரித்துகொண்டு கூறினார். அவரது சிரிப்பு  துயரத்துக்கும் நம்பிக்கைக்கும் இடையில் கட்டப்பட்டிருந்த மெல்லிய இழையிற் தொங்கும் பாறை போலிருந்தது.  புரொஸ்ரேற் (prostate) சுரப்பியில்  வரும் புற்றுநோய்கலங்களை அவை வேறங்கங்களுக்குப் பரவமுன்னர் கண்டு பிடித்து  அகற்றி விட்டால் பாதிப்பில்லை. அதற்காகத்தான் இப்பரிசோதனையைச் செய்யும்படி வைத்திய நிபுணர்  கேட்டிருக்கிறார்  என்றேன்.   “ தெரியும் ஆனால்  அழைப்பிதழ்  தயாரித்தாயிற்றே!   போகும் நாள் மட்டும்தான் தெளிவில்லை. பிள்ளைகள்  கலங்கினார்கள்.   நான்  இன்னும் இருக்கிறேன்தானே! என்று சொன்னேன் “ என்றார்.

சோதனை முடிந்து திரும்புகையிற்  பரிசோதனை முடிவு நன்றாக  அமைய வாழ்த்துகள். மீண்டும்  வைத்தியசாலையிற் சந்திப்போம் என்று நாங்கள்  இங்கு  சொல்லுவதில்லை  என்றேன்.  “ உங்களுக்குத் தெரியாதா? ” என்றார். விடை பெறும் பொழுது உனது தாய் நாடு எது என்று கேட்டார்  இலங்கை என்றேன். அப்படியா நல்ல மனிதன் நீ. உன்னுடன் உரையாடிய கணங்கள்  இதமாக இருந்தனவென்றார்.  “ தொழிலால் நான் ஒரு கசாப்புக்கடைக்காறன். இபோழுது  ஓய்வு பெற்று விட்டேன். முன்னர் எனது கடைக்குத்  துருக்கி மற்றும் மொரோக்கொவைப் பூர்வீகமாகக் கொண்ட உழைப்பாளிகள்  வருவார்கள். மாட்டின் குடல்  அவர்களுக்கு விருப்பமானது. மாலைப்பொழுதுகளை அவர்களுடன்  தேனீர் அருந்திக்களித்திருக்கிறேன். எம் கையில்  என்ன இருக்கிறது என்றபடிக்கு  உடைமாற்ற  ஆரம்பித்தார். நான் தயாரிப்பறையில்  இருந்து வெளியில் வந்த போது வரவேற்பறையில் இருந்த முதியவர்  ஒருவர் என்னை  நோக்கி: “ அவள் கடந்த இரண்டு மாதங்களில் 26 கிலோ எடையை இழந்து விட்டாள். நோவைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லை என்கிறாள். அவள் முகத்தைப்பார்க்க எனக்கு  முடியவில்லை. வைத்தியர் பரிசோதனை முடிவுகளைப்  பொறுத்து  காலத்தை  நீட்ட முடியுமென்கிறார். அவளோ வலியிற் கழியும் பெறுமதியற்ற  கணங்களை வைத்துக்  கொண்டு நான்  என்ன செய்ய என்னைப் போகவிடு என்கிறாள்  நான் என்ன  செய்ய? “ எனப்பேசத் தொடங்கினார் அவரது குரல் இயலாமை எனும் அகலபாதாளத்தில் இருந்து வந்து எனக்கு கேட்டது. அவரது மனைவி சுவாசப்பைப் புற்று நோயாற் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் அருகில் அமர்ந்து  தோள்களைத் தடவிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்பதைத்தவிர எதுவும் என்னாற் செய்ய முடியவில்லை. பின்னர் எழுத்து சென்று  அடுத்த நோயாளியைப்  பரிசோதனைக்காகத்  தயார்ப்படுத்துவதற்காக கணணித்திரைக்கு முன் அமர்ந்து அவர் தொடர்பான தகவல்களை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் மனம் அன்று முழுவதும் கனத்துக் கிடந்தது.

நாங்கள் அறிந்தவர்கள், உறவு கொண்டவர்கள் சந்தித்த மரணத்தையிட்டா? நாங்கள்  சந்திக்கும்  மனிதர்கள்  சந்திக்கபோகிற மரணத்தையிட்டா? அல்லது  நாங்கள்  சந்திக்கப் போகிற மரணத்தையிட்டா? எதையிட்டு மனம் கனத்துக் கிடந்தது தெரியவில்லை.

மாலையிற் தொடங்கி நள்ளிரவில்  முடியும் வேலை நாள் அது . வீடு திரும்பிய பொழுது முகப்புத்தகத்தில் குருபரன் அவர்கள் ஒரு செய்தியை அனுப்பி இருந்தார். கவிஞர் திருமாவளவன்  அவர்கள் மரணமடைந்து விட்டார்.  அவர் பற்றிக் குறிப்பொன்றை  எழுத்தித்தரமுடியுமா எனச் செய்தி அனுப்பியிருந்தார். அவசர அவசரமாக ஊடகத்திற்கு குறிப்பொன்றை எழுதுவதில் இருக்கக்கூடிய போலித்தனத்தை எனது வேலைக்களை வென்றிருந்தது. மறுநாள் அதிகாலை மீண்டும் வேலைக்கு செல்லவும் வேண்டும். எனது கவிதைப் புத்தக வெளியீட்டுக்காகக் கனடா சென்ற பொழுது கவிஞர் திருமாவளவன் அவர்களுடன்  எனக்கு அறிமுகம்  ஏற்பட்டது. கர்வம் அற்று இயல்பான நட்புடன் உரையாடும்  கவிஞனை அவரிற் கண்டிருந்தேன்.  எனது கவிதைப் புத்தக வெளியீட்டுக்குப் பிற்பாடு  கவிஞர் சேரன் அவர்களின் வீட்டில் நிகழ்ந்த இரவு போசனத்தின் போதும் உரையாடி இருந்தோம். பின்னர் சில தடவைகள் முகப்புத்தகத்திலும் உரையாடி இருக்கிறோம்.

2014 இன் ஆரம்பத்திலேயே கவிஞர் திருமா அவர்கள் புற்றுநோயாற் பாதிக்கப்பட்டிருந்ததை  அறிந்திருந்தேன். திருமாவளவன்  அவர்களுடன் முகப்புத்தகத்தில் உரையாடிய பின்னர்  CT can செய்யும் பொழுதுகளில் அவரது நினைவு வந்து போகும். அவருடன் அக்காலத்தில்  நிகழ்ந்த உரையாடலைத் திரும்பி வாசிக்கும் போது அவர் விட்ட ஒரு தவறு  புலப்படுகிறது. கீமோ தெரப்பியை அவர் தவிர்த்து விட்டிருக்கிறார்  ( இது குறித்துப் பதிவுகள்  ஆசிரியர் கிரிதரன் அவர்களும் ஒரு குறிப்பை  எழுதி இருந்தார்) ஹீமோ சிகிஸ்சை புற்றுநோயில் இருந்து அவரை முழுவதுமாக விடுவிக்காதென்றாலும் வாழ்நாளை அதிகரிக்க உதவியிருக்கும். அவர் கனடாவில் இருந்தபடியால் அவரது சிக்ஸ்சை முறைகள் தொடர்பாக அறிவுரை கூறத் தேவை இல்லை என்ற உணர்வுமட்டுமல்ல அவரது தனிப்பட்ட உணர்வுகளை நெருங்கும் அளவுக்கு எங்களுக்கிடையில் நட்பும் இருக்கவில்லை.

திருமாவளவன்  13/01/2014 15:17

கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. ஓய்விலிருக்கிறேன். நாரி கொதிக்கிறது. ஆரம்பத்தில் தசைநார் பிடிப்பு என மருந்து தந்தார்கள் ஒருமாதமாகியும் மாற்றம் இல்லை.அதனால் இப்போ சில டெஸ்ட்களைச் செய்யவேண்டி இருக்கிறது.போவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்

தேவ அபிரா 13/01/2014 15:29

குளிர் ஒரு காரணமாக இருக்கலாம் .நாங்கள் வெப்ப நாட்டுக்கென உருவாக்கப்பட்டவர்கள். குளிரைத் தாங்குவதற்கான சக்தி எங்களுடைய சந்ததிக்கு உருவாகக்காலம் எடுக்கும். ஆனாலும் நாரிப்பிடிப்பு தொடர்ந்தால் கட்டாயம் காட்டவேண்டும். காட்டுங்கள் MRI scan செய்து பார்ப்பது அவசியம். சிறுநீரகக் கற்களும் நோவை உருவாக்கலாம். வைத்தியருடன் சகல சாத்தியங்களைப்பற்றியும் உரையாடுங்கள் நன்றாக ஓய்வெடுங்கள் சீக்கிரம் குணமாகுங்கள்

திருமாவளவன் 21/01/2014 18:29

கடைசியில் அல்றா சவுன்ட் டெஸ்ட் செய்தேன். இப்போ ஈரல் சிறுநீரகப்பகுதியில் நீர்க்கோர்வைப் படிவு இருப்பதாகச் சொல்கிறார்கள் அடுத்து CT ஸ்கான் செய்யவேண்டும். அதன் பின்பு தான் நோய்க்கு மருந்து. அதுவரை வலி நிவாரணியோடு காலத்தைக் கழிக்கவேண்டும்

தேவ அபிரா  21/01/2014 18:41

ஈரல், சிறுநீரகம் போன்றவற்றினுள் இருக்கும் (kist)கிஸ்ற் (நீர்ப்பைகள்) ஆபத்தற்றவை. அங்கங்களைச் சுற்றி உருவாகும் நீர்க்கோப்பும் அச்சம் தரக்கூடியதல்ல ஆனால் நீர்க்கோப்புக்கான காரணம் அறியப்படவேண்டியது CT scan அவசியமானதுதான். சீக்கிரம் குணமடையுங்கள்

திருமாவளவன் 21/01/2014 18:52

2000 மாம் ஆண்டில் தொப்புழின் உட்பகுதியிற் தொற்று ஏற்பட்டு அது வயிற்றின் உட்பகுதியிற் பரவியதால் ஒரு ஒப்பிரேஷன் மூலம் தொற்று அகற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இருக்கலாம் என நம்புகிறேன். எனினும் டாக்டர் சொன்னால்தான் தெரியும். ஆனால் பயப்பட வேண்டியதில்லை என்பதே சிறு மகிழ்ச்சி.

தேவ அபிரா 22/01/2014 23:26

வேலையில் இருந்த படியால் உரையாடலைத் தொடரமுடியவில்லை. பயம் கொள்ளவேண்டாம் CT யை செய்து வைத்தியருடன் உரையாடுங்கள்

திருமாவளவன் 23/02/2014 13:57

தங்கள் வாழ்த்துச்செய்திக்கும் அன்புக்கும் நன்றி. கான்ஸர் எனக் கண்டறிந்து சிகிச்சை தொடங்கி விட்டது

தேவ அபிரா 23/02/2014 20:52

துயரமான செய்தி நண்பரே. எவ்விதமாக எதிர்கொள்கிறீர்கள், என்னவிதமான புற்றுநோயது? எந்தப்படிநிலையில் உள்ளது(கேட்க அனுமதி உண்டேல்)

திருமாவளவன் 23/02/2014 21:15

நாளை விபரமாக சொல்கிறேன்

தேவ அபிரா 23/02/2014 21:21

நல்லது உறுதியுடன் இருக்கத் தெரிந்தவர் நீங்கள்

திருமாவளவன் 06/03/2014 00:06

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞர்! பல்லாண்டு …. பல்லாண்டு….. பல்லாண்டு வாழி!

தேவ அபிரா 06/03/2014 00:07

நன்றி திருமா எப்படி இருக்கிறீர்கள்

திருமாவளவன் 06/03/2014 00:11

நல்லாயிருக்கிறேன் என்று எப்படிச் சொல்வது?

தேவ அபிரா 06/03/2014 00:13

இல்லை. எனக்கு தெரியும். உணர்ந்து கொள்கிறேன். என்ன விதமான சிகிஸ்சையை எதிர்கொள்கிறீர்கள்  உங்கள் உடல் நிலையைக் கேட்டேன். பரிமாறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. புரிந்து கொள்கிறேன். நோய்க்கு நோய் செய்க.

திருமாவளவன் 06/03/2014 00:20

என் நோய் ஜெனட்டிக்காய் வந்திருக்கலாம் எனக் கருதுவதால் அப்படிவந்திருந்தால் கீமோ அல்லாமல் வேறு பக்கவிளைவற்ற மருந்துகள் உண்டென்றும் சொன்னார்கள். அப்படியாயின் அது ஜெனட்டிக் மூலம் வந்ததா அதற்கு உரிய மருந்து உண்டா என உறுதி செய்யவேண்டும். எனவே என் முள்ளந்தண்டில் இருந்து எடுத்த திசுவை ஆய்வுக்காக அமெரிக்க சோதனைச்சாலைக்கு அனுப்பி இருக்கிறார்கள் வரும் 12 புதன் வரை காத்திருக்கவேணும்

திருமாவளவன் 17/03/2014 00:29

இப்போ !ஹீமோ தெரப்பி செய்யாமல் மாத்திரையோடு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதால் இப்போ உடலும் மனமும் தெம்பாயிருக்கிறது.

தேவ அபிரா 17/03/2014 21:02

புத்தக வெளியீட்டு விழாவில் உங்கள் படம் பார்த்தேன். கம்பீரமாக இருக்கிறீர்கள். அப்படியே தொடருங்கள். நிறைய எழுதுங்கள். துன்பம் தருபவை தள்ளிப்போகும்

திருமாவளவன் 7/03/2014 22:46

அன்பும் நன்றியும்.

மரணிப்பவர்களுக்கு நாங்கள் செலுத்துகிற அஞ்சலிக்கு என்ன பெறுமதி இருக்கிறது? இன்னுமொன்றையும்  நாங்கள்  மறந்து  போகிறோம். கவிஞர்கள் தங்களுடைய உயிர்களைப் புதைத்து வைக்கிற கவிதைகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு எப்படி அஞ்சலி  செலுத்த முடியும்?

அத்தவறை நான் செய்ய மாட்டேன்.

*                                          *                                             *

அண்மைக்காலங்களில்  மரணமடைந்த இன்னும் இரு மனிதர்களின் மரணங்களும் எங்களின் கபாலங்களுக்குள்  குடைந்து கொண்டிருக்கின்றன. பல  சந்தர்ப்பங்களில் மனிதர்கள் வாழும் போது அவர்களது வாழ்க்கைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவம் அவர்கள் மரணமடையும் போது மட்டும் அளிக்கப்படுவதைப்பார்க்கும்  போது உலகம் பற்றிய புரிதல் இன்னும்  ஆழப்படுகிறது. மனிதர்கள் தங்கள்  பாடுகளோடும் சின்னச் சின்ன ஆசைகளோடும் இலட்சியங்களோடும் தங்களுக்கு  அளிக்கப்பட்ட அவகாசத்தை வாழ்க்கையாக்கிக் கொள்கிறார்கள். இயற்கை எய்திய திருமாவும்  அண்மையில் மரணமடைந்த டேவிட் அய்யாவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் அரசியற் துறைப்பொறுப்பாளர் தமிழினியும் மேற்குறித்த வகைக்குள் வருவதில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டமென்னும் சமூக பொருளாதார அரசியற் செயற்பாட்டிற்கு தங்களது வாழ்க்கையை முழுமையாகவோ பகுதியாகவோ வெவ்வேறு வகைகளிற் தந்தவர்கள். தனிமனிதனாக டேவிட் அய்யா தனது கொள்கையையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்தவர். அவருக்கு அஞ்சலி  செலுத்த எனக்குமட்டுமல்ல பலருக்கும் எந்தத்தகுதியும் இல்லை. தமிழினி விடுதலைப்புலிகளின் அதிகாரத்தின் ஒரு பகுதியாக இருந்தவர். அவ்வனுபவம் சுய விமர்சனங்களுடன் கூடி வெளிவரக்கூடிய அகப்புறச் சூழ்நிலைகள் அவருக்கு வாய்த்திருக்கும் என்றால்? அதுமட்டுமல்ல தமிழினி அவர்கள் அவர்களது அதிகார நிலையில் இருந்து வீழ்த்தப்பட்டு எதிரியின் அதிகாரத்தின் பிடியில் அகப்பட்டு வதையும் பட்டவர் அவ்வனுபவங்களையும் கூட வெளிக்கொண்டுவரக்கூடிய புறச் சூழ்நிலைகளும் அவருக்கு வாய்க்கவில்லை. இவ்வுலகத்தில் வாழ்கிற எல்லோரையும் எங்களையும் நாங்கள் ஏதோவொரு கணத்தில் இழக்கப் போகிறோம். எங்கள் எல்லாவிதமான முகங்களையும் அவற்றின் அனுபவங்களையும் இதயசுத்தியுடன் வெளிப்படுத்துகிற பொறுப்புணர்வை  அடைகிறபோது எங்களுடைய அனுபவங்களின் மொழி சமூகத்திற்கு பெறுமதியான முதுசமாகிறது. பொதுவெளியில் தங்களை முன்னிறுத்திச் செயற்படுகிறவர்கள் விட்டுச் செல்கிற அனுபவத்திற்கு மரணமில்லை.

இன்றைக்கு டேவிட் அய்யா அவர்களினதும், தமிழினி அவர்களினதும் மரணவீடுகளிற் பலர் வைக்கிற ஒப்பாரி பந்தலிலே பாகற்காய்  போகேக்கை பாப்பமடா என்கிற வகைக்குள் வைக்கப்படவேண்டியது. மனிதர்களை  வாழும்போதே நேசிக்கத் தெரியாவிடின் அவர்கள் மரணிக்கும் போதும்  அமைதியாக இருந்து விடுவது  நல்லது.

மரணம்

வரமுன் வதைக்கிறது.

வந்தபின் பேசுகிறது.

பேசவைக்கிறது.

பேசாமல் வைகிறது.

மரணத்தின் முன்

பேசப்படாத பாராட்டும்

பாராடப்பதாத அன்பும்

அஞ்சலியாவதன் அர்த்தம் அறியேன்.

மாலையை உணராத தோளில்

தீயை உணராத தோலில்

விழுகிற சொற்கள் எரிந்து சாம்பலாகும்.

இதயம் கிளர்ந்து அல்லது பிளந்து எழுதிய வார்த்தைகளில் வாழுகிறவர்களுக்கு

மரணம் அச்சுறுத்தலாவதில்லை.

வாழ்வதற்குப் பிரியப்படும் உயிரின் காதுள் தவழும்

அன்பும் நட்பும் காதலும்

பிரியும் கணதில் உள்ளொலிக்கும்.

ஆத்மா சாந்திஅடையும்.

SHARE