வவுனியா கள்ளிக்குளம் பிரதேசத்தில் 85 கிலோ கிராம் மரைமான் இறைச்சியுடன் மூன்று சந்தேக நபர்களை வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து சில உபகரணங்களையும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றிய உபகரணங்களுடன் சந்தேக நபர்களை அதிரடிப்படையினர் வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் நேற்று மாலை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
2 லட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம் சந்தேக நபர்களை தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினத்திற்குள் அபராத தொகையை செலுத்தி முடிக்க வேண்டும் என வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.