மலேசியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவருக்கு ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து சர்வதேச மன்னிப்பு சபை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.மலேசிய தமிழரான குணசேகர் பிச்சைமுத்து(34) என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் கடந்த 2005ம் ஆண்டு 25 வயதான வாலிபர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
மூவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து குணசேகர் பிச்சைமுத்து உள்ளிட்ட மூவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், குணசேகரின் தாயார் நேற்று வெளியிட்ட செய்தியில் ‘எனக்கு சிறை அதிகாரிகள் 48 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளனர். இந்த நேரத்திற்குள் மகனை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொள்ளுங்கள்’ என்றும் கூறியுள்ளனர். இந்த தகவலின் மூலம், குணசேகருக்கு நாளை எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அதனை நிறைவேற்றும் திகதியை முன் கூட்டியே அதிகாரிகள் தெரிவிக்க மாட்டார்கள். இது மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான சர்வதேச விதிமுறைகளை மீறுவதற்கு சமமானது என சர்வதேச மன்னிப்பு சபையான அம்னிஸ்டி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக குணசேகருக்கு முன் கூட்டியே அதிகாரிகள் தெரிவித்து விட்டனரா என்ற தகவல்களும் வெளியாகவில்லை. ‘குணசேகர் செய்த குற்றத்திற்கு மரண தண்டனை விதித்திருப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும், இதனை மலேசிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அம்னாஸ்டி வலியுறுத்தியுள்ளது. பல்வேறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மலேசிய சிறைகளில் சுமார் 1,000 கைதிகள் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. |