மஹிந்தவினால் வழங்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் – வீட்டுக்குள் நுழையும் விஷ ஜந்துகள்

219

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு கிராம சேவக பிரிவில் உள்ள மீனவர் வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் மீனவர் வீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது இந்த வீடுகள் வசிப்பதற்கு ஒவ்வாத நிலையில் இருப்பதாகவும், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீடுகள் வழங்கப்படும் போது குடும்பத்தில் இருவர் அல்லது மூவர் இருந்ததாகவும் அதற்கு ஏற்ற வகையில் மிக சிறிய அளவில் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த மக்கள், தற்போது தங்களுக்கு பிள்ளைகள் பிறந்துவளர்ந்த பின்னர் இந்த வீடுகள் வசிப்பதற்கு இட வசதி போதாமல் உள்ளதாகவும் இந்த வீட்டுத்திட்டத்தில் வாழும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டுத்திட்ட கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மு.கமலேஸ்வரன் இது குறித்து தெரிவிக்கையில்,

இந்த வீடுகள் எங்களுக்கு 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

அதன் பின் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினால் நிலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டும் கூரைகள் சேதமடைந்தும் முற்றாக இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது.

இது சம்பந்தமாக போட்டோ பிடித்தும் கடிதம் மூலமும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தோம் அவர்கள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்கின்றோம் என்று கூறி சென்றனர்.

ஆனால் இன்னும் எதனையும் காணவில்லை. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அமைச்சர்களோ இதனை கருத்தில் எடுத்து மிக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த வீட்டுத்திட்டத்தில் வாழும் ரி.சற்குணலிங்கம் தெரிவிக்கையில் வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டு ஓட்டைகள் உள்ளது.

தற்போது மழை காலம் நெருங்கி விட்டதால் படை எடுக்கும் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகள் வீட்டுக்குள் நுழையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை இந்த வீடு ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணித்து வழங்கப்பட்டது.

ஆனால் இப்போது உடைந்து வெடித்த நிலையில் காணப்படுவதால் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு இருப்பதற்கு பயமாக உள்ளது என்றும் குடியிருப்பு வாசியான எம்.சிவகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-45 625-0-560-320-160-600-053-800-668-160-90-46 625-0-560-320-160-600-053-800-668-160-90-47

SHARE