
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஸவின் இராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.மிஹிந்தலை ரஜமஹா விஹாரையில் புனரமைப்பு பணிகளில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்களை நேற்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சிக்கல்களும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் பாதுகாப்பிற்காக 105 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும் இதில் 50 பேர் மீள அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக 50 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏனைய இராணுவ வீரர்களையும் நீக்கி முழுமையாக காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் மேலும் காவல்துறை உத்தியோகத்தர்களை மஹிந்தவின் பாதுகாப்பிற்கு வழங்க முடியும் எனவும் அவ்வாறு கோரிக்கை விடுத்தால் 100 அல்ல 150 காவல்துறை உத்தியோகத்தர்களையும் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் நாட்டை பாதுகாக்கவே இருக்கின்றார்கள் எனவும் பிரபுக்களை பாதுகாப்பது அவர்களின் பொறுப்பு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.