முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களில் இரத்தக்கறைகள் இல்லை என்றும், தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடன் அவர் ‘டீல்’ (ஒப்பந்தம்) செய்திருந்தார் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:- “டலஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் விமர்சனம் செய்துள்ளனர். நாங்கள் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாகவே அனைத்து முடிவுகளையும் எடுப்போம். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் அதன்பிரகாரமே முகம்கொடுக்கவுள்ளோம். அத்தீர்மானத்துக்கு உடன்படாமல் டலஸ், நாமல் செயற்படுவார்களாயின் அது தொடர்பில் கட்சி தீர்மானம் எடுக்கும். நாமல் ராஜபக்ஷவுக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் உள்ளது. எனினும், தனது தந்தையின் கட்சி என எண்ணி தான்தோன்றித்தனமாகச் செயற்படுவாராயின் அது அவருக்கு பிரதிகூலமான விளைவுகளை ஏற்படுத்தும். மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் ‘டீல்’ செய்து தேர்தலில் வெற்றி பெற்றார். அதனால் அவர் ஆட்சியில் எமக்குப் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் முடிந்தது. அப்போது நாங்கள் செய்த டீல் வெற்றியளித்தது. இதேபோன்று, சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியாத நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அரசு இருந்தபோது ஐக்கிய தேசியக் கட்சியுடன் டீல் செய்து 16 உறுப்பினர்களை எம்பக்கம் எடுத்தனர். இவ்வாறு பல டீல்களை மஹிந்த செய்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் மங்கள சமரவீரவுடன் நாமல் ராஜபக்ஷவை அனுப்பி டீல் பேசப்பட்டது. எனினும், நல்லாட்சியில் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்டையிலேயே அரசுடன் இணைந்தோம். இது வெளிப்படையான ஒன்றாகும். ஆகவே, நாமல் தனது தந்தையின் ஆட்சிக்காலம் போல் இந்த அரசை எண்ணியிருப்பாராயின் அது தவறாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 15 வருடங்கள் தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இருக்குமாயின் அதன் பின்னர் அக்கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி ஆட்சியமைக்க முடியும் என நாமல் கனவு கண்டுள்ளார். எனினும், நாங்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். மக்கள் எம்பக்கம் உள்ளார்கள்” – என்றார். –