ஏற்கனவே தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அமெரிக்காவுக்கு சென்று கற்கை ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அமெரிக்காவுக்கு செலவதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்த அவர், தாம் அரசாங்கங்களை எவ்வாறு கவிழ்ப்பது என்பதை கற்றுக்கொள்ளவே அமெரிக்கா செல்வதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் மாஸாசூசெட் நிறுவகத்தில் ஒரு மாத கற்கையை மேற்கொண்ட அவர், நேரத்தை வீணடிக்காமல் செயற்பாடுகளில் இறங்கினார்.
முதலில் தம்முடன் கட்சிக்குள் முரண்பட்டிருந்த சஜித் பிரேமதாஸவுடன் இணக்கத்தை ஏற்படுத்தினார்.
இதன் அடிப்படையில் ஊவா மாகாணசபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றது.
இதனையடுத்து மைத்திரியை பொதுவேட்பாளராக நிறுத்தி அதிலும் வெற்றி பெற்று மஹிந்தவின் அரசாங்கத்தை கவிழ்த்தார்.
இந்தநிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டு வார விஜயத்தை மேற்கொண்டு சீனாவுக்கு செல்லவுள்ளார்.
முன்னதாக இந்த விஜயம் ஒரு மாதம் என்ற காலப்பகுதி என்று சொல்லப்பட்ட போதும் தற்போது அது இரண்டு வார காலமாக குறைக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவின் இந்த விஜயம், மைத்திரி- ரணில் அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்காகவா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ரஸ்ய தூதுவரை அண்மையில் சந்தித்த நிகழ்வும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே சீனாவும் ரஸ்யாவும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு உதவும் என்ற வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும் ஒருபோதும் சீனாவும், ரஸ்யாவும் பிராந்தியத்தின் அரசாங்கங்களை கவிழ்க்க பணங்களை செலவழிக்கப் போவதில்லை என்று கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.