மஹிந்தவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் – இரா. சம்பந்தன்

172

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மஹிந்தவுக்கு எதிராக ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இவர் உறுதி செய்துள்ளார்.

ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 122 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித் பெரேரா மற்றும் லக்ஸ்மன் கிரியெல்லவும் இதனை உறுதிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நாடாளுமன்றை விட்டு வெளிநடப்பு செய்த பிரதமர் மஹிந்த.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார்.

ஜே.வி.பியினால் இன்றைய தினம், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பிலான வாக்கெடுப்பினை நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய முயற்சித்த போது, நாடாளுமன்றில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் நாளை காலை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை.

நாங்கள் சிறுபான்மை அரசாங்கமாக செயல்படுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சற்று முன்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவருக்குமே பெரும்பான்மை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியிருந்தது.

எனினும் நாளை காலை பத்து மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

 

மகிந்த – மைத்திரி அரசாங்கத்தில் பெற்றுக் கொண்ட பதவியை ராஜினாமா செய்யும் ஐ.தே.க முக்கியஸ்தர்

அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இராஜாங்க அமைச்சர் பதவி வகித்து வந்த வசந்த சேனாநாயக்க, அண்மையில் மகிந்த – மைத்திரி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டிருந்தார்.

எனினும், தற்பொழுது தாம் அமைச்சுப் பதவியை துறப்பதாகத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரே தாம் எனவும் எப்பொழுதும் அதில் மாற்றம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசாங்கத்திற்கு எதிர்பார்த்தளவு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பெரும்பான்மை இழந்த மைத்திரி அரசாங்கம் – முடிவுக்கு வரும் மோதல்.

சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக சபாசாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை சற்று முன்னர் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய தரப்பு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாளைய தினம் தீர்மானம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நீக்கப்பட்டமை மற்றும் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் வெளியான வர்த்தமானி நிராகரிக்கப்பட்டது. காட்போர்ட் அட்டை அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை. அதனை அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு நினைவூட்டுவதற்கு நான் விரும்புகின்றேன்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெரும்மையானோர் வாய் மூலம் பதிலளித்தனர். அதனால் சபாநாயகர் வாய்மூலம் நிறைவேற்றப்பட்டதாக தீர்மானம் ஒன்று வழங்கினார். அந்த யோசனைக்கு ஆதரவு வெளியிட்ட அனைவரும் சபாநாயகருக்க கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளனர்.

122 பேர் அதற்கு கையொப்பமிட்டுள்ளனர். தீர்மானம் பிழை என்றால் நாளை யோசனை ஒன்றை சமர்ப்பித்து கொள்ளுங்கள். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பரபரப்பான நிலையில் இன்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. எனினும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சபை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

# பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ள வடிவேல் சுரேஷ், ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படத் தீர்மானித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

SHARE